Thursday, July 31, 2014

011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு


      பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
      இருங்கழி செறுவின் உழாஅது செய்த
      வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
      என்றூழ் விடர குன்றம் போகும்
5    கதழ் கோல் உமணர் காதல் மட மகள்
      சில் கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
      நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச்
      சேரி விலைமாறு கூறலின் மனைய
      விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
10  மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எனக்கு
      இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
      மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு
      எவ்வம் தீர வாங்குந் தந்தை
      கை பூண் பகட்டின் வருந்தி
      வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.

[அகநானூறு 140, அம்மூவனார், நெய்தல் திணை ]உப்பு என்னும் உண் பொருள் தமிழர்கள் வாழ்வியலில் ஒரு சிறப்பு  இடத்தை பெற்றுள்ளது. பண்டைய தமிழ் இலக்கியங்களில், நெய்தல் திணையில் எண்ணிறைந்த பாடல்கள் உப்பையும் அதனை செய்து விற்கும் உமணர் வாழ்வையும் விவரித்துள்ளது. 

மேற்க் கண்ட அம்மூவனார் இயற்றிய அகநானூறு பாடல், உப்பு விளைவிக்கும்  தொழில்நுட்பம் ஒன்றை அழகாக நமக்கு விளக்குகின்றது. "இருங்கழி செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி " (அடிகள் 2,3), அதாவது, உப்பளத்தில் உழாமல் விளையும் உப்புக்கு ஒரு விலையிட்டு. அந்த  விலைக்கு நெல்லுக்கு  இணையாக வெண் கல் உப்பினை  பண்டம் மாற்றி உமணர் விற்றனர் என்று இப் பாடல் கூறுகிறது.

மற்றுமொறு நெய்தல் திணையில் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்  இயற்றிய பாடல்,  விளைந்த உப்பை வரிசை வரிசையாக வண்டிகளில் ஏற்றி கடற்கரையில் ஒரு இடம் கூடி, பெருங்கழனி உழுவும் உழவர் போல வறுமையில் இரந்தோர்க்கு நிறைய கொடுக்கும் வள்ளல் தன்மையும், அதுபோக விலையிட்டு விற்கும் வணிக நேர்த்தியும் பெற்றுரிந்ததாக கூறுகிறது (அடிகள் 5-11).  

       நெடும் கயிறு வலந்த குறுங்கண் அவ் வலை
       கடல் பாடு அழிய இன மீன் முகந்து
       துணை புணர் உவகையர் பரத மாக்கள்
       இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
5     உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்
       ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ
       அயிர் திணி அடை கரை ஒலிப்ப வாங்கிப்
       பெருங் களம் தொகுத்த உழவர் போல
       இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி
10   பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக்
       கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ
       பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
       மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
       தண் நறும் கானல் வந்து நும்
       வண்ணம் எவனோ என்றனிர் செலினே?

[அகநானூறு 30,முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன், நெய்தல் திணை]

உப்பு உற்பத்தியும் அதன் வணிகமும் தொண்று தொட்டு தமிழர்கள் வாழிவியலில் பிணைந்த ஒன்று என இது போன்ற தொண்மையான எண்ணிறைந்த பாடல்கள் வழியே தெளிவாக நமக்கு புலப்படுகின்றது.

சரி, வரலாற்றில் இன்னும் சற்று பின் நோக்கி செல்வோம். உணவில் உப்பு சேர்த்து உண்ணும் பழக்கம் எக்காலம் தோன்றிற்று? அதன் இன்றியமையாத தொடக்கநிலை தேவை எதுவாக இருந்தது? 

உப்பும் பரிணாம வளர்ச்சியும்

பரிணாம வளர்ச்சியில், கடல் வாழ் உயிரினமாக இருந்து பின் நில வாழ் உயிரினமாக உருவெடுத்து கடல் உப்பை விட்டு வெகு காலம் விலகி இருந்தோம். அதற்கேற்ப, நில வாழ் உயிரினங்களின் மரபணுத் தொகையும் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளா சிறு சிறு மாற்றங்களுக்கு ஆட்பட்டு, உப்பினை பிரிந்தே வாழவும் முடிந்தது. சான்றாக, இன்றும் விலங்கினங்கள் பெரும்பாலும் உப்பு உண்ணுவதில்லை. தாவரம் உண்ணும் விலங்கினங்கள் வெகு குறைவாக தான் உப்பு உட்கொள்ளும். வேட்டையாடி தசையுண்ணும் விலங்கினங்களும் பெரும்பாலும் உப்பு உண்ணுவதில்லை. குறிப்பாக, விலங்கினங்களின் குருதியில் தான் உப்பு மிகுதி. அதுவும், வேட்டையில் குருதி இழந்து உண்ணும் தசைகளில் உப்பு குறைவாகவே இருக்கும் [மேற்க்கோள்: க]. 

ஆக, இவ்வாறு இன்றைய நில வாழ் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி இருக்க, மாந்தர்களுக்கு மட்டும் எப்படி உப்பு தேவையானது. திடிரென கடல் உப்பை நாடிய நிகழ்வு எதற்கு? இருங்கழி செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கதை என்ன ?

 உணவில் உப்பு சேர்த்து உண்ணும் வழக்கம் ஏறக் குறைய கடந்த 10,000 ஆண்டுகளுக்குரிய வரலாறு. மேற்க் கண்ட இரு அகநானூறு பாடல்கள் முதல் பல தொண்மையான தமிழ் இலக்கியங்களின் பாடல்களில் உப்பு உண்ணும் குறிப்புகள் உள்ளன.

உடலும் நீரும்

உப்பின் தலையான பண்பு யாதெனில், உடலில் உப்பு எவ்வழியோ நீரும் அவ்வழி. கொளுத்தும் வெயிலில், வியர்வை சிந்தும் வினைஞர், வியர்வையில் நீருடன் உப்பையும் இழக்கிறார். அதுபோல், வயிற்றுப்போக்கு நோயிலும் நீருடன் உப்பையும் நாம் உடலில் இழக்கிறோம். இதுபோன்ற திடீர் நீர், உப்பு இழப்பில் இருந்து உயிர் காக்கும் இன்றியமையா தேவையே உப்பு பயன்பாட்டின் தொடக்கமாக இருந்திருக்கும் என ஆய்வொன்று கணிக்கிறது [மேற்க்கோள்: க]. இத் தனி சிறப்பினை தவிர்த்து, சுவை போன்ற அரிய பல நுண்ணிய பண்புகளும் உப்புக்கு உண்டு.

நிரவலாக, 70 கிலோ எடையுடைய மாந்தரின் உடலில், நீர்ப் பகுதி மட்டும் 40-45 கிலோ  இருக்கும். ஆக, உடலின் திட பகுதியை  விட, நீர் பகுதியே மிகுதி. ஆம் இது வியப்புக்குரியது தான்! "நீரின்றி அமையாது உலகு" என்ற பொய்யாமொழி  புலவரின் கூற்றுப் போல், நீரின்றி அமையாததும் உடம்பு. உடலில் பெரும்பாலான நீர், உயிரணுக்குள் அதாவது அக நீர்ப் பகுதியாக (Intracellular fluid) உள்ளது. ஏறத்தாழ 12-14 லி. மட்டுமே உயிரணுக்களுக்கு வெளியே உள்ளது. இப் புற நீர்ப் பகுதியில் 5 லி. குருதியும் உள்ளடக்கம்.  உடலின் அந்தந்த பாகங்களின் தேவைக்கேற்ப குருதி நீரை கொண்டுச் சேர்க்கும்.

குருதியில் உப்பு மிகுதியானால், நாளடைவில் உப்புடன் நீரும் பெருகி குருதி உயர்வழுத்தம் ஏற்படக் கூடும். மாறாக, உப்பு குறைந்தால் நாளடைவில் அழுத்தமும் குறையும். சராசரியாக, நாளொன்றுக்கு 3-5 கிராம் உப்பு வரை உண்ணலாம். ஆனால், சிறிது சிறிதாய் பழக்க வழக்கங்கள் மாறி 10-20 கிராம் வரை இந்நாளில் நாம் உட்கொள்கிறோம்.

குருதியழுத்த ஆய்வுகள்

அண்மையில், மேற்கொண்ட ஆய்வுகளின் படி, நெய்தல் நில வாழ் மக்கள், சூழல் நிமித்தமாக இயல்பிலேயே கூடுதலான உப்பு உட்கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். இவர்களில், மற்ற நில மக்களை விட குருதியழுத்தமும் கூடுதலாகவே காணப்படுகிறது. நேர்மாறாக, முல்லை நில வாழ் பழங்குடி இனம் ஒன்று, இயல்பில் நாளொன்றுக்கு ஒரு கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். சான்றாக, அமேசான் காட்டுப் பகுதி வாழ் மக்கள் இனம் ஒன்றில் குருதியழுத்தம் குறைவாகவே காணப்படுகிறது. ஆக, இயல்பு நிலைகளில், குருதியழுத்தம் உண்ணும் உப்பு அளவினை தழுவியே பெரும்பாலும் அமைகிறது.

இது தவிர, குருதி உயர்வழுத்தம் உண்டாக்கும் காரணி உணவு சார்ந்ததா உணர்வு சார்ந்ததா என்ற கேள்விக்கு விடையளிக்கும் ஆய்வொன்று தகைவின்றி வாழும் இத்தாலிய குருமட வாழ் மாடக்கன்னிகள் இடையில் நடந்தது. ஒரே அளவு உப்பு உண்ணும் குருமடம் வெளியில் செவ்வன வாழும் மக்களை ஒப்பிட்டு பார்க்கையில், குருமட வாழ் துறவிகளுக்கு குருதியழுத்தம் உணர்வு சார்ந்து குறைவாகவே காணப்பட்டது.

உடலில், உப்பு, நீர் அளவுகளை பெரும்பாலும் கட்டுப்படுத்துவது சிறுநீரகம். குறிப்பாக, சோடியம் குளோரைடு சேர்மமான உப்பின் சோடியம் மின்மி மூலமாக தான் உடல் நீர் அளவை சிறுநீரகம் கட்டுப்படுத்தும்.

சிறுநீரகத்தின் நுண்கூறு இயல்

சிறுநீரகத்தின் அடிப்படை இயக்க அலகானது சிறுநீரகத்தி என்னும் பகுதி. சிறுநீரக உயிரணுக்கள் இடுக்கின்றி ஒரே அடுக்கில் ஒரு வளைவி போல் அமைந்து, அவ் வளைவிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, அண்மையில் இருந்து சேய்ப் பகுதி வரை ஒரு நுண் புழலாய் (மென்மையான; புழல் + காய் = புடலங்காய்) அமைந்துள்ளது. எப்படி மகளிர் அணியும் பொன் வளையல்கள் ஒன்றின் மேல் ஒன்று வைத்து, அவைகளின் மையங்கள் ஒரே அச்சில் நிற்க்க அடுக்கினால் ஒரு (திடமான) குழலாய் அமையுமோ அதுபோல். நுண்புழலின் அகப் பகுதியில் குருதி வடிகப் பெற்று, அது பல மாற்றங்களுக்கும் உட்பட்டு சிறுநீர் உருவாகும். 

குறிப்பாக, சிறுநீரகத்தியின் பந்தூள்குழிசி (glomerulus) பகுதியில் உள்ள சல்லடை வழியாக, குருதியில் இருந்து மற்ற கழிவு பொருட்களுடன்,  நீரும் சோடியமும் பிரித்து வடிகப்படுகிறது. வடிகப்பட்ட மொத்த சோடியத்தில், ஏறத்தாழ 60 விழுக்காடு அண்மைச் சுருள் நுண்புழலிலும் (Proximal convoluted tubule), 24 விழுக்காடு என்லேயின் வளைவிலும் (Henle loop), 10 விழுக்காடு சேயச் சுருள் நுண்புழலிலும் (Distal convoluted tubule),  4 விழுக்காடுக்கும் சற்று குறைவாக சேகரிக்கும் கானிலும் (Collecting duct) உறிஞ்சபட்டு பின் குருதிக்கே அனுப்பபடுகிறது. இதற்க்கு ஏதுவாய் நுண்தமனிகள் நுண்புழலை ஒட்டியே பக்கவாட்டில் அமைந்துள்ளது. உறிஞ்சபடாத எஞ்சியுள்ள கழிவு பொருட்கள் சிறுநீரில் வெளியேறுகின்றன.
  

ஆண்டு ஒன்று கழிகையில் 
   அகவை ஒன்று கூடும் 
வீழ்ச்சி என்று வருகையில் 
  விழுக்காடு ஒன்று குறையும்
நாற்பது அன்று மலர்கையில் 
  நலம் பேண வேண்டும்.

முதிர்ச்சியினால், இயல்பிலே அகவை 40தில் தொடங்கி ஆண்டொன்றுக்கு 1 விழுக்காடு வீதம் சிறுநீரகம் தன் செயல் திறனை இழக்கின்றது [மேற்க்கோள்: உ]. உட்கொள்ளும் உப்பு  இரையக குடல்பாதை வழியாக குருதியில் சேர்கின்றது. ஆகையால், உண்ணும் உப்பின் அளவு இச் சிறுநீரகம் செயல் இழப்பிற்க்கு ஏற்ப குறைக்காமல் உண்ணும் நிலையில் குருதி உயர்வழுத்தம் ஏற்படும். குருதி உயர்வழுத்த காரணிகளில் இயல்பான ஒன்றும் இது. 

உப்பு (சோடியம்), நீர் பிறழ் ஓம்புமதி (Homeostasis)

உயிரணுக்குள் உப்பு, நீர் போன்ற மின்மிகளை, மூலக்கூறுகளை கொண்டுச் செல்வதும், வெளிக் கொணர்வதும் அதன் மென்சவ்வில் (Plasma Membrane) அமைந்துள்ள கடத்திகளும் (Transporters), வாய்க்கால்களும் (Channels).

கடத்திகள் அடிப்படையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, அடர்த்தி வாட்டத்தில் இயங்குவது. இவை மின்மிகளை, மூலக்கூறுகளை கண அடர்த்தி பகுதியில் இருந்து, அடர்த்தி நலிந்த பகுதிக்கு இறைக்க உதவும். மற்றொண்டு, வேதியல் திறனால் இயங்குவது. திறன் ஏற்றிகள் இவ்வகையைச் சேர்ந்தது. இவை அடர்த்தி நலிந்த பகுதியில் இருந்து கண அடர்த்தி பகுதிக்கு, அடர்த்தி வாட்டத்திற்கு எதிராக மின்மிகளை வேதியல் திறன் கொண்டு ஏற்றி இறைக்கும்.

கடத்திகளின் உட்பிரிவு, நேர்கடத்தி, எதிர்கடத்தி, தனிக் கடத்தி வகைகள் ஆகும். நேர்கடத்தியானது, அதற்குரிய மின்மியுடன் மற்றொரு மின்மியோ, மூலக்கூறோ ஒரே பக்கவாட்டில் கடத்தும். அதாவது, உயிரணுக்களில் புறம் இருந்து அகமோ, அகம் இருந்து புறமோ ஒரே பக்கவாட்டில் கடத்தும். மாறாக, எதிர்கடத்திகள், அதற்குரிய மின்மியுடன் மற்றொரு மின்மியோ, மூலக்கூறோ எதிர் பக்கவாட்டில் கடத்தும். அதாவது, ஒன்று புறம் இருந்து அகம் செல்ல, மற்றொன்று அகம் இருந்து புறம் செல்லும். தனிக் கடத்திகள், அதற்குரிய மூலக்கூறை மட்டுமே தனியாய் கடத்தும். கடத்திகள் போலவே வாய்க்கால்களில் வேறு உட்பிரிவுகள் உண்டு.

சிறுநீரகத்தியில், சோடியம் மின்மி கடத்திகள் மேற்கண்ட வகைகளில் உள்ளன.  இவைபோக, சோடியம் வாய்க்காலும் உண்டு. அவை ஒன்றொன்றும் சிறுநீரகத்தியின் பகுதிகேற்ப அமைந்துள்ளன. இக் கடத்திகள், வாய்க்கால்கள் செய்யும் வார்ப்பு அச்சான மரபணுக்களில் பிழை நேர்ந்தால், சிறுநீரகத்தியின் பகுதிகளில் பழுதுபட்ட கடத்திகளும், வாய்க்கால்களும் செய்து பொருத்தபடும். இதனால், சோடியம் உறிஞ்சபடும் திறனில் சீர்கேடுகள் ஏற்பட்டு, உடலின் நீர் உப்பு அளவுகளில் ஏற்றத் தாழ்வு உண்டாகும்.

பெரும்பாலான சோடியம் அண்மைச் சுருள் நுண்புழல்  பகுதியில் சோ+/+
(Na+/ H+) எதிர்கடத்தி மூலமாக புழலில் வளைவியாய் அமைந்த உயிரணுக்களுக்குள் புகுந்து பின் அவைகளின் புற அடி பகுதியில் உள்ள சோ+/பொ+ (Na+/K+) திறன் ஏற்றி வழியாக நுண்புழல் புற பகுதியின் தமனிக்கே செல்கின்றது. அதாவது, அகம் புகுந்து புறம் செல்லும் சோடியம்!

இதுபோல, என்லேயின் வளைவில், சோபொ2கு (NaK2Cl) நேர்கடத்தி வாயிலாக நுழைந்து பின் தமனிக்கும், சேயச் சுருள் நுண்புழலில் சோ+/கு- (Na+/Cl-) நேர்கடத்தி வாயிலாக நுழைந்து பின் தமனிக்கும், சேகரிக்கும் கானில் மட்டும் மேலணி சோடியம் வாய்க்கால் (ENaC) வழி ஓடி பின் தமனிக்கும் செல்கின்றது.
 
மரபணுக்களின் நேரடி வார்ப்பு அச்சுப்பிழைகளில் இரு வகையுண்டு, ஒன்று பிழையால் செயல் இழப்பு மற்றொன்று, செயல் பெருக்கல்.

சான்றாக, லிட்டிலின் குறித்தொகுப்பு (Liddle's Syndrome) பழுதுபட்ட ENaC சோடியம் வாய்க்கால், சேகரிக்கும் கானில் பொருந்தும்போது, அச்சுப்பிழையால் செயல் பெருகி இயல்புக்கு மிகுதியாய் சோடியம் குருதியில் சேர்கின்றது. லிட்டிலின் குறித்தொகுப்பு உள்ளவர்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுவத்தின் மூலம் குருதி உயர்வழுத்ததை சரி செய்யலாம்.

லிட்டிலின் குறித்தொகுப்பின் மறுமுகம் அச்சுப்பிழையால் செயல் இழப்பு நேர்ந்து சோடியம் குறைபாடும்  உண்டாகும். 

இதுபோல், கிட்டெல்மான் குறித்தொகுப்பு (Gitelman Syndrome), சேயச் சுருள் நுண்புழலில் உள்ள சோ+/கு- (Na+/Cl-) நேர்கடத்தி அச்சுப்பிழையால் செயல் இழந்தும், பார்தார் குறித்தொகுப்பு (Bartter Syndrome) என்லேயின் வளைவில் உள்ள சோபொ2கு (NaK2Cl) நேர்கடத்தி அச்சுப்பிழையால் செயல் இழந்தும் சோடியம் குறைபாடு ஏற்படுகிறது. சோடியம் தேவைக்கு கீழ் அளவு குறைந்தாலும் ஆபத்து தான்! மேற்கண்டவாறு, ஏற்றத் தாழ்வு நிகழாமல், தேவையின் அளவு பிறழாமல் காக்கும் நிகழ்வே பிறழ் ஓம்புமதி ஆகும்.


"நெடும் கயிறு வலந்த குறுங்கண் அவ் வலை
கடல் பாடு அழிய இன மீன் முகந்து..."

[அகநானூறு 30, அடி 1,2, முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன், நெய்தல் திணை]

நெடும் கயிறு கொண்டு குறுங்கண் அமைய பின்னிய அழகிய வலையில் கடல் சென்று அதன் பீடு அழிய அங்கு நீந்திய மீன் குழுக்களை முகந்தனர் என்று முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் பாடல் சொல்லும் வலைப்பின்னல் போலவே, அமைப்பில் உயிரணுக்களின் மென்சவ்வினை தாங்கி நிற்கும் ஒரு வகை சட்டகம் உள்ளது. இதன் சட்டங்களை பிணைப்பது அடுஊசின் (Adducin) என்ற ஒரு வகை பிடி.

மரபணுக்களின் நேரடி வார்ப்பு அச்சுப்பிழைகள் போக, மறைமுகமாய் அடுஊசின் பிடி பிழையாய் அமையும் போது, புற அடி பகுதியில் உள்ள சோ+/பொ+ (Na+/K+) திறன் ஏற்றிகளின்  செயல் பெருகி இயல்புக்கு மிகுதியாய் சோடியம் கூடி உயர்வழுத்தம் உண்டாகும்.

எமிய மருந்து (Personalized Medicine)
 
மேலே குறிப்பிட்டது போல், ஒவ்வொரு குறைபாடுக்கும் தனியொரு மருந்தோ, முற்றிலும் குணபடுத்தும் வழியோ தேவை. வருங்காலத்தில், யாருக்கு எவ்வித குறைபாடு உண்டு என்று நோய் நாடி, நோய் முதல் நாடி, அதற்கேற்ப துள்ளியமான வழி வகுக்கும் நிலை அமையும். அவ்வாறு காலத்தொட்டிய எமிய மருந்தின் வளர்ச்சி வரும் வரை,
 

"உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 
மிக்கற்றால் நீள விடல்." திருக்குறள் 1302.


உணவு அளவுக்கு ஏற்ப உப்பு என்று வள்ளுவ பெருந்தகை அருளியது போல், மருத்துவரை அனுகி தன் தேவை அளவறிந்து உப்பு சேர்த்தல் யாவர்க்கும் நலமே.

 
மேற்கோள்
  
க. Links between dietary salt intake, renal salt handling, blood pressure, and cardiovascular diseases.  Meneton P, Jeunemaitre X, de Wardener HE, MacGregor GA.  Physiol Rev. 2005 Apr;85(2):679-715. Review.

உ. Adv Chronic Kidney Dis. The aging kidney: physiological changes. Weinstein JR, Anderson S. 2010 Jul;17(4):302-7.தொடர்புள்ள கட்டுரை
010. மயங்கு வியர் பொறித்த நுதலள் - ஓட்டம்

   2 comments:

  1. பண்டைய செய்யுள்களும் அண்மை அறிவியலும் கலந்த சிறப்பான இடுகை. உங்கள் உழைப்புக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete