Friday, April 25, 2014

எதுசரி அதுசரி - பகுதி 3: அரிசிப்பொரி சோளப்பொரி



அம்மூவனார்: கபிலா என்ன எண்ணிய வண்ணம் உள்ளாய்?

கபிலர்: ஒன்றும் இல்லை அம்மூவனா! அண்மையில் நெஞ்சை நெருடிய ஒரு பேச்சு, எழுத்து வழக்கை பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தேன். பெரிய திரையரங்கு, பூங்கா போன்ற  கேளிக்கை இடங்களில் கவனித்து கவலையுற்ற வழக்கு தான் அது.

அம்மூவனார்: எதை குறித்து கூறுகிறாய்?

கபிலர்:  மாமூலனார்  இயற்றிய பாலைத் திணை அகநானுறு பாடல் ஒன்று உங்களுக்கு நினைவில் உள்ளதா? 

அதாவது,

"... ... ...
அறு நீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின்... ... ... "

[அகநானுறு 1, அடி 13, மாமூலனார், பாலைத் திணை]

என்று வரும் அந்த பாடல்.

அம்மூவனார்: சிறிது விளக்கமாய் கூறு.

கபிலர்:  இந்த அகநானுறு பாடலில் பாலைத் திணையை தழுவி கடும் வறட்ச்சி நிலையை மாமூலனார் விவரிக்கிறார்.  பைஞ்சுனை வற்றும் அளவுக்கு கொளுத்தும் வெயில். அந்த வெப்பத்தில், நெல்(அரிசி) தூவினால், பொரியாக மாறும் என மிகச்சிறப்பாக அரிசிப்பொரி செய்யும் நுட்பத்தை அன்றே தன் பாடலில் விளக்கியுள்ளார்.  

அம்மூவனார்: ஆம், அதற்கு?

கபிலர்:  தென்னகதில் ஆயிரம் கணக்கான ஆண்டுகளாக தொண்று தொட்டு வழக்கில் உள்ள ஒரு சிற்றுண்டி அரிசிப்பொரி. இவ்வரிசிப்பொரியில், காரப்பொரி , கடலைப்பொரி, உப்புபொரி, இனிப்புபொரி என எத்தனையோ வகைகள் இருக்க ஒரு வகை அரிசிப்பொரியாவது ஒரு திரையரங்கிலே விற்க்கபடுகிறதா? ஏன் பெரிய திரையரங்கிலோ அல்லது அது போன்ற பெரிய கேளிக்கை இடங்களிலோ அரிசிப்பொரிக்கு இடம் இல்லையா? ஒரு வாலி என்ன, ஒரு கோணிபை நிறைய 1000 ரூபாய் கொடுத்து வாங்கி உண்ணுங்கள், படம் பாருங்கள். யார் வேண்டாம் என்றது?

அம்மூவனார்: சரிதான்!

கபிலர்:  இவ் வழக்கு ஒரு வகை கவலை தர, சோளப்பொரி சிக்கலுக்கு வருவோம். இதற்க்கு பரவலாக எல்லோருக்கும் பழகின வேற்று மொழிப் பெயர் "பாப்கான்". ஏன் "யானை பசிக்கு சோளப்பொரி " என்றொரு பழ மொழியும் உண்டல்லவா? அரிசிப்பொரி தான் நகர்ப்புற பெரிய திரையரங்குகளில் விற்க்கபடவில்லை என்றாலும், "சோளப்பொரி" என்று தமிழிலே பெயரிட்டாவது விற்க்ககூடாதா ? இவ்வழக்கு சரியா? இது அவலம் இல்லையா?

அம்மூவனார்: உண்மை தான். ஆனால், இந்த குறிப்பிட்ட தொழில் நுட்பம் இங்கு உருவானதா?

கபிலர்:  திரையிடும் அறிவியல் நுட்பம் கண்டறிந்தது எடிசன்
என்பதினால் அவர் படம் மட்டுமா உலகெங்கும் திரையிடப்படுகின்றது. அவர் மேல் உள்ள நன்றி உணர்வாலோ, அல்ல, வரலாற்று குறியீடு நிமித்தமாகவோ அவருக்கு சிலை தான் வடித்து நினைவுக் கூர்ந்தோமா? இல்லையே! திரைமேல் ஒளிப்பதும் தமிழ், திரைபின் ஒலிப்பதும் தமிழ், பின் தின்பதிற்கு "பொரி" போதாதா? திருத்திக்கொள்வோம் தீங்கில்லை இனி!

அம்மூவனார்: சரிதான்!

கபிலர்:  நீங்கள் எப்படியோ, நான் இனி மேல் தமிழக திரையரங்குகளில் அரிசிப்பொரி, அல்லது குறைந்த அளவு, "சோளப்பொரி" என்று எழுதியாவது விற்றால் தான் அந்த திரையரங்கம் செல்வதென சூள் கொண்டுள்ளேன். உவகையாக இச்சூளை நீங்கள் "அரிசிப்பொரி சோளப்பொரி கலகம்" என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள்!!   

   

2 comments:

  1. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, பகிர்ந்தோம்!

      Delete