Saturday, April 12, 2014

010. மயங்கு வியர் பொறித்த நுதலள் - ஓட்டம்


வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள்
வதியும் மன்னே ...

[அகநானுறு 17, அடி 1-5, கயமனார், பாலைத் திணை]


இந்த அகநானுறு பாடல் வெகுச் சிறப்பாக  இளம் பெண்கள் விளையாடி களைப்புருவதை நம் முன் காண்பிக்கிறது. இப்பாடலில், தன்  செல்வம் செழித்த வீட்டில் வசிக்கும் போது, சக இளம் தோழிகளுடன் சிறிது நேரம் பந்து விளையாடி, கழங்கு விளையாடி, களைப்புற்று தன் மேனி தளர்வதை தாயிடம் முறையிட்டு, நெற்றியில் விளைந்த வியர்வையால் (தன் மேனி) குளிர தாயை தழுவினாள் என்று கயமனார்  பாடுகிறார். இவ்வைந்து அடிகளில் தான் எத்தனை தகவல்!

மாந்தர்களுக்கே உரிய தனிச் சிறப்பு பண்புகளில் ஒன்று வியர்வை. கயமனார்  நன்கு உணர்ந்து பாடியது போல், உடலில் தசைகளின் இயக்கத்தினால் உருவாகும் வெப்பத்தை தணியச் செய்ய வியர்வை உருவாகின்றது. நடப்பதை காட்டிலும் ஓட்டத்தில் 10 மடங்கு வெப்பம் பெருகும்.

பரிணாம வளர்ச்சியில் வெகு தொலைவு சென்று இரை தேடுவதிர்க்கும், தன்னை மற்ற கொடிய விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இச் சிறப்பு பண்பு பேர் பங்களித்துள்ளது (மேற்கோள் க). இப் பண்பினை பெற்ற மாந்தன் ஒரு நாளில் 10 கி. மீ. தூரத்தை கடக்க இயலும். அடர்த்தியான முடியும் பிடரியும் உடல் மேல் கொண்ட விலங்கினங்கள் பெரும்பாலும் மூச்சிறைத்தே வெப்பத்தை தணித்துக்கொள்ளும். இதனால், பாயிச்சலில் வேகமாக ஓடினாலும் வெயிலில் வெகு தொலைவு ஓட இயலாது. உதாரணமாக, வெயிலில் சிறுத்தையால் பாயிச்சலில் 1 கி.மீ. மேல் ஓட இயலாது.  

நாய், நரி போன்ற விலங்குகள் ஒரு நாளில் 10-20 கி.மீ. வரை மித ஓட்டத்தில் ஓடகூடியவை. ஏன், ஒரு பனிநில நாய் வகை 50 கி.மீ. வரை பனி காலங்களில் கடுங்குளிரில் ஓடகூடியவை. இருப்பினும், வெயிலில் இவ் வோட்ட திறனை  பெரிதளவு இவை இழக்கும். காரணம், வெப்பத்தை தணித்துக் கொள்ளும் ஆற்றல் சிறப்பாக இவ் விலங்கினகளில் இல்லை என்பது தான். பொதுவாக உடலில் ஏற்ப்படும் வெப்பத்தை வியர்வையால், மூச்சிறைபால், நாவால் மேனி மேல் துவட்டியும் விலங்கினங்கள் தணித்துக் கொள்ளும். ஆனால், ஓட்டத்தில் பெரும்பாலும் மூச்சிறைபாலே இவ் விலங்குகள் வெப்பத்தை தணிக்க முடியும்.

ஆக, உச்சி வெயிலில், மூச்சிறைப்பை குறைத்து வியர்வை கொண்டு மாந்தர் தம்மால் மட்டுமே வெகு தொலைவு ஓட இயலும். ஓடினாள், ஓடினாள், மயங்கு வியர் பொறித்த நுதலள் ஓடினாள்!

 

மேற்கோள்

. The First Humans - Origin and Early Evolution of the Genus Homo, Chapter 8, 2009, Springer.

  

1 comment:

  1. nalla oru pathivu ithai pol niraya pathivugal thamizhukuga neengal alika vendum nandrii

    ReplyDelete