Sunday, August 4, 2013

005. மரபணுத்தொகை - நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

   
"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; 
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; 
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; 
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; 
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; 
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே; 
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"


தொல்காப்பியம் தமிழில் தலையான முதல் நூல். இப்பெரு நூல், தமிழ் மொழியின் ஆளுமையும், தமிழர்களின் பண்பாட்டு சிறப்பினையும் தெளிவாக விவரித்துள்ளதை பெரும்பாலும் நாம் அறிவோம். இதுபோக, தொல்காப்பியம் உயிரின வாழ்வியலையும் (physiology) அதன் அடிபடையில் அமைந்த உயிரின வகைபாட்டியலின் (taxonomy) தொடக்கத்தை மிகச் சிறப்பாக விவரித்துள்ளது. 

தோலும் தொட்டு அறிவும் (touch sense),  நாக்கும் சுவையறிவும் (gustation), மூக்கும் நுகரறிவும் (olfaction), கண்ணும் பார்வையம் (vision), செவியும் கேள்வியும் (audition) அடங்கிய ஐம்புல அறிவோடு, ஆறாம் அறிவான மனதையும் (mind) உயிரின வாழ்வியலின் அடிப்படை என்று உயிரினங்களை நேரடியாக ஆயிந்து நெறிப்படுத்தியுள்ளதை, 2000 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கண்ட தொல்காப்பிய பாடல் 27 பதித்துள்ளது. இப்பாடலை தொடர்ந்து வரும் பாடல்களில் எவ்வகை உயிரினங்கள் எப்படி வகைபடுத்தலாம் என்ற தொடக்கநிலை சிந்தனைகளை தொல்காப்பியம் பதித்துள்ளது. இச் சிந்தனைகளை, மெய்பிக்கவும், மேம்படுத்தவும் தொடர்ந்து செய்துவந்திருந்தால், இன்று தமிழ் அறிவியலும், மருத்துவமும் இவ்வுலகில் தலைச்சிறந்து வளர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பண்டைய தமிழ் இலக்கிய பதிப்புகள் இத்தகைய சிந்தனைகளை பெற்றிருந்தாலும், இடைகால இலக்கியங்களில் எவ்வித அறிவியல் சிந்தனைகளை பதித்துள்ளது என்ற ஆர்வமும் இன்று நமக்கு பெருகியுள்ளது. 

ஒவ்வொரு உயிரினத்தின் உருவ அமைப்பும் பண்புகளும் அதன் மரபணுத்தொகையை தழுவியே அமைகின்றன. மேலும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி மரபணுத்தொகையில் ஏற்ப்படும் மாற்றங்களை பொறுத்தே அமைகின்றன. இக்கட்டுரையில் மரபியல் அறிவியல் ஆய்வில் இன்றைய பெரிய கண்டிபிடிப்புகள் யாவை என காண்போம். நாம் நாமாக இயங்க, மெய்யிரக் கணக்கான உயிரணுக்கள் (cells) ஒருங்கினைந்து இயங்க வேண்டும். இவ்வுயிரணுக்களை இயக்குவது, நம் மரபணுத்தொகையே (genome). இம் மரபணுத்தொகை, எத்தகைய தன்மைகளை கொண்டுள்ளது, என்ற ஆர்வமும் ஆய்வுகளும் வெகு காலமாக தொடர்ந்து பெருகியுள்ளது.

முதல் படியாக, 1950களில்,  மரபிழை மூலக்கூறின் பரிமாணங்களை (DNA structure) அறிய ஆய்வுகள் தொடர்ந்தன. 1953இல், வெற்றிகரமாக வாட்சன் (Watson) மற்றும் கிரிக்கு (Crick) என்ற மரபியல் விஞ்ஞாணிகள்  மரபிழை மூலக்கூற்றின் பரிமாணங்களை தம் ஆய்வின் முடிவுகளை கொண்டு விவரித்தனர்.

இரண்டாம் படியாக, 1990களில், பன்னாட்டு கூட்டு முயற்ச்சியாக மனித மரபணுத்தொகையில் உள்ள மரபணுக்களின் எண்ணிக்கையும் அவை அடைங்கிய மொத்த சொற்றொடர்களையும் (DNA Sequence) மரபியல் விஞ்ஞாணிகள் ஆயிந்து ஆராயிந்தனர் (Human Genome Project).

மனித மரபணுத்தொகையானது, ஏறத்தாழ 3 தொள்ளுண் [௲௲௲] (3x109 அல்ல 3 billion) அடிப்படை மூலக்கூறுகளை (nucleotides) கொண்ட நெடுந்தொடராக கூறப்படுகிறது. இதில், மொத்தம் 20,000–25,000 மரபணுக்கள் (genes) உள்ளதாக முடிவுகளை அறிவித்துள்ளனர். ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால் இத்தனை மரபணுக்களும் வெரும் இரண்டு விழுக்காடு (2%) தான். மீதியுள்ள 98% மரபணுத்தொகை பயனெற்ற மரபிழையாக (Junk DNA) தான் வெகு காலமாக ஒதுக்கி வைத்தனர்.

ஆனால், மூன்றாம் படியாக, அண்மையில் மேற்கொண்ட பெரிதோர் பன்னாட்டு கூட்டு முயற்ச்சியில், மனித மரபணுத்தொகையில், 80%, செயல்பாட்டில் தனிச்சிறப்புகளை கொண்டது என்று ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர் [ENCODE Project - மரபிழை அங்கங்களின் தகவற்களஞ்சியம்] (மேற்கோள்: க). இம்மரபிழை தொடர்கள், மேற்க்கண்ட மொத்த மரபணுக்களின் வெவேறு கட்டுபாட்டு தளங்களாக விவரிக்க பட்டுள்ளன.  சரி, இப்புதிய கண்டுபிடிப்பின் தாக்கம் என்ன? மரபணுகளின் நேரடி பாதிப்பால் விளையும் சீர்கேடுகள் போக, மரபணுகளின் கட்டுபாட்டு தளங்களில், அதாவது ஒரு படிமேல், ஏற்படும் பாதிப்பும் உடல் சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதுதான். இவ்வுயர்நிலை மரபியல் கண்டுபிடிப்பு, மருத்துவ அறிவை கற்பனைக்கு எட்டா அளவிற்கு விரிவடைய செய்துள்ளது. 
 

மேற்கோள்
. An integrated encyclopedia of DNA elements in the human genome. ENCODE Project Consortium, Bernstein BE, Birney E, Dunham I, Green ED, Gunter C, Snyder M.  Nature. 2012 Sep 6;489(7414):57-74.