Friday, September 13, 2013

006. மனநலம் மன்னுயிர்க் காக்கம்




தூய மனநலத்தின் சிறப்புகளை வள்ளுவ பெருந்தகை (Thiruvalluvar) 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தம்முடைய சிந்தனைகளாக நமக்கு அளித்துள்ளார். மேலே, குறிப்பிட்ட இரு குரள்களும் அதற்க்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். மனநலம் பொறுத்து ஏனைய வளங்கள் அமையும் எனவும், அச்சிறந்த மனநலத்தை நல்லதோர் சமூகம் பேணும் எனவும், அடிப்படை உளவியல் சிந்தனைகளை இவ்வாறு விவரித்துள்ளாரா என்று நாம் சிந்திக்கவேண்டும். சரி, இதற்கும் மேலே ஆழமான உளவியல் சிந்தனைகள் திருக்குறளில் உள்ளனவா என்று சற்று தேடலாம்.

பிறப்பு, இறப்பு, உணவு, நோய், மருந்து ஆகிய பல வாழ்வியல் அங்கங்களை ஆராய்ந்து, தமது சிந்தனைகளை தொகுத்தளித்த திருவள்ளுவர், உளவியல் நிகழ்வுகளையும் தெள்ள தெளிவாக தம் பாடல்களில் பதித்துள்ளார் என்றால் அது மிகையாகத்து. இந்நிகழ்வுகள்ளுக்கு அவர் இன்னதென்று தனி பெயர் சூட்டவில்லையே தவிர, சில உளவியல் நிகழ்வுகளை இடுக்கணழியாமை என்ற அதிகாரம் வழியாக நமக்கு தொகுத்துள்ளார் என்றே கூறலாம்.  இதுபோன்ற பல அரிய பைந்தமிழ் அறிவியல் மற்றும் மருத்துவ சிந்தனைகளை முறிவின்றி தொடர்ந்து மேம்படுத்தும் செயற்கரிய செயலை செய்யாமலே போனோம்.


"இடுக்கண் வருங்கால் நகுக அதனை

'இடுக்கண் வருங்கால் நகுக' என்று துன்பத்தை எதிர்கொள்ளும் ஒரு அணுகுமுறையை வெகு நேர்த்தியாக கூறியுள்ளார். இக்கால உளவியலில் [Psychology] விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான நகைப்பாக (அதாவது, துன்பம் நேர்கையில் நகுதல்) [Humor, Level 4 Mature Defense Mechanisms] இருக்குமோ என்று செந்தமிழ் கூறும் நல்லுலகமும், உளவியல் ஆய்வாளர்களும் சேர்ந்துதான் கூறவேண்டும். உளவியல் நிகழ்வுகளை உற்று கவனித்து, நினைந்து, ஆராயாமல் இவ்வளவு தெளிவாக ஒருவரால் கூற இயலாது. ஆக, அச்சிறப்புகள் யாவும் வள்ளுவ பெருந்தகைக்கேச் சாரும்.



இன்னாமையை இன்பம் என எற்றுக் கொள்பவர்களை, அவர்களுடைய பகைவரும் சிறப்புடன் போற்றுவர் என்று நல்லறிஞ்சர்கள் விளக்கியுள்ளனர். இன்னாமையை இன்பம் என எப்படி எற்றுக் கொள்ள மூடியும்? அப்படி அக்காலத்தில் எற்றுக் கொண்டார்களா? இக்குறள் வழி சிந்தனையும், தற்கால உளவியலில் விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான உயர்மடைமாற்றத்துக்கு (அதாவது, தான் உற்ற இடையூறை நேர்மறையாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றிக்கொள்தல்) [Sublimation, Mature Defense Mechanisms] இணையான சிந்தனை என தோன்றுகிறது. இக்குறளில் உள்ள 'ஒன்னார் விழையுஞ் சிறப்பு' என்ற சீர்களின் பொருள், [அதாவது, பகையும் (உள்ளிட்ட அனைத்து சமூகமும்) சிறப்பிக்கும் வகை] உயர்மடைமாற்றத்துக்கு இணையாக நிலை நிறுத்துகிறது. இவ்வாறு, நேர்மறையாக மாற்றிக்கொள்வதால், இன்னாமையை இன்பம் என ஏற்றுக்கொள்ள இயலும். எடுத்துக் காட்டாக, தாகத்திற்கு தவறி தம்பியை இழந்த  தமையன் ஊரெங்கும் தண்ணீர் பந்தல் நிறுவும் செயல்.      



துன்பத்திற்கு ஆட்கொள்ளாதவர்கள் துன்பத்திர்க்கே துன்பம் விழைவிர்பார்கள் என கூறுகிறார். அனால், இக்குறளில் தோன்றும் 'இடும்பைக்கு  இடும்பை படாஅ தவர் ' என்ற சீர்கள் ஆய்வுக்குறியது என்பது தனிப்பட்ட கருத்து. இது தற்கால உளவியலில் விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான ஒட்டா நிலைக்கு (அதாவது, உற்ற இடையூறும் அதை சார்ந்த உணர்வும் ஒட்டாதிருத்தல்) [Isolation of Affect, Anxiety Defense Mechanisms] இணையான சிந்தனையா என்று உளவியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறினால் சிறப்பு. 


மேலும், மனநிலை கெட உடல் நோகும் என்ற கருத்தும் தமிழர்களுக்கு புதிதல்ல. பைந்தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து விவரிக்கபட்டும் ஒரு வகையான மனம் பொருந்திய உடல் மாற்றம், பசலை (பசப்பு). இதுபோக, பசப்புறுபருவரல் என்றொரு தனி அதிகாரத்தையே வள்ளுவ பெருந்தகை நமக்காக படைத்துள்ளார்.




எப்படி காதலனை பிரிவதினால் வரும் மனமாற்றத்தின் விளைவு மேனியில் பசலையோ, அது போல துன்பம் விழைவிக்கும் மனமாற்றத்தின் இலக்கமும் உடலா என நாம் எண்ணலாமா? அப்படி என்றால் மனநிலை மாற்றம் எவ்வாறு உடலுக்கு கேடு விளைவிக்கும் என்ற சிந்தனையின் அடிப்படையில் அண்மையில் உருவெடுத்தது தான் உளஉடல் மருத்துவம் [Psychosomatic Medicine]. இப் புதிய மருத்துவ பிரிவின் கீழ், சமூக மற்றும் உளவியல் காரணிகள் எவ்வித தாக்கங்களை உடல் நலத்தில் உருவாகுகின்றன என்பதை ஆராயவும், ஆயிந்து அதன் வழியே அதற்க்குரிய மருத்துவ முறைகளை கண்டறிவதுதான்.

உளவியல் நிகழ்வுகள், முளையில் ஏற்ப்படும் வேதியல் மாற்றங்களை தழுவியே நிகழும் என்பது இன்றைய பொது கருத்து. நரம்பணுவியல் [Neuroscience] தற்பொழுது படிப்படியாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், மனித மூளையின் இயக்கங்கள் குறித்து முழுமையாக இன்னமும் நாம் அறியவேண்டியது பல உள்ளன. இவ்வாண்டு (2013), மனித மூளையின் இயக்கங்களை புத்தம் புதிய நரம்பணுவியல் தொழில்நுட்பங்களை கொண்டு  துள்ளியமாகா அறிந்துக்கொள்ள தொடங்கப்பட்ட ஒரு கூட்டு முயற்ச்சியானது மூளை இயக்கங்கள் திட்டம் [BRAIN initiative aka. Brain Activity Map Project] (மேற்கோள்: க). குறிப்பிடும் வகையில், இது வரை இல்லாத பெரிய அளவிற்கு இம் முயற்ச்சிகள் உந்தப்பட்டுள்ளது.

இன்றைய நரம்பணுவியல், எவ்வாறு தனிப்பட்ட நரம்பணுக்கள் மூளையில் செய்திகளை உள்வாங்கி மருமொழிகின்றன என்ற அளவே கூறுகின்றது. ஆனால், இத் திட்டத்தின் மூலம், முதல் முறையாக மூளையில் உள்ள தனிப்பட்ட நரம்பணுகளின் இயக்கங்கள் விளைவாக ஏற்படும் கருத்து உருவாக்கம் (thought process) நுணுக்கங்களையும் நேரடியாக கண்டு புரிந்துக்கொள்ள இயலும் என எதிர்ப்பார்க்க படுகிறது. கருத்து உருவாக்கம் நுணுக்கங்கள் அறிந்தால், அது மனித வாழ்விர்க்கே அச்சாணியாக விளங்கும் மனம் என்னும் உட்ப்பொருளை காணும் அரிய வழி.  ஆக, உளவியலிலும், நரம்பியலிலும் நிரவியுள்ள பற்பல புதிர்களுக்கு இத் திட்டம் பொருள் விளக்கும் என நம்பப்படுகிறது.  



மேற்கோள்
. Research priorities. The NIH BRAIN Initiative.  Insel TR, Landis SC, Collins FS.  Science. 2013 May 10;340(6133): 687-8





Sunday, August 4, 2013

005. மரபணுத்தொகை - நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

   
"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; 
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; 
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; 
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; 
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; 
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே; 
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"


தொல்காப்பியம் தமிழில் தலையான முதல் நூல். இப்பெரு நூல், தமிழ் மொழியின் ஆளுமையும், தமிழர்களின் பண்பாட்டு சிறப்பினையும் தெளிவாக விவரித்துள்ளதை பெரும்பாலும் நாம் அறிவோம். இதுபோக, தொல்காப்பியம் உயிரின வாழ்வியலையும் (physiology) அதன் அடிபடையில் அமைந்த உயிரின வகைபாட்டியலின் (taxonomy) தொடக்கத்தை மிகச் சிறப்பாக விவரித்துள்ளது. 

தோலும் தொட்டு அறிவும் (touch sense),  நாக்கும் சுவையறிவும் (gustation), மூக்கும் நுகரறிவும் (olfaction), கண்ணும் பார்வையம் (vision), செவியும் கேள்வியும் (audition) அடங்கிய ஐம்புல அறிவோடு, ஆறாம் அறிவான மனதையும் (mind) உயிரின வாழ்வியலின் அடிப்படை என்று உயிரினங்களை நேரடியாக ஆயிந்து நெறிப்படுத்தியுள்ளதை, 2000 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கண்ட தொல்காப்பிய பாடல் 27 பதித்துள்ளது. இப்பாடலை தொடர்ந்து வரும் பாடல்களில் எவ்வகை உயிரினங்கள் எப்படி வகைபடுத்தலாம் என்ற தொடக்கநிலை சிந்தனைகளை தொல்காப்பியம் பதித்துள்ளது. இச் சிந்தனைகளை, மெய்பிக்கவும், மேம்படுத்தவும் தொடர்ந்து செய்துவந்திருந்தால், இன்று தமிழ் அறிவியலும், மருத்துவமும் இவ்வுலகில் தலைச்சிறந்து வளர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பண்டைய தமிழ் இலக்கிய பதிப்புகள் இத்தகைய சிந்தனைகளை பெற்றிருந்தாலும், இடைகால இலக்கியங்களில் எவ்வித அறிவியல் சிந்தனைகளை பதித்துள்ளது என்ற ஆர்வமும் இன்று நமக்கு பெருகியுள்ளது. 

ஒவ்வொரு உயிரினத்தின் உருவ அமைப்பும் பண்புகளும் அதன் மரபணுத்தொகையை தழுவியே அமைகின்றன. மேலும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி மரபணுத்தொகையில் ஏற்ப்படும் மாற்றங்களை பொறுத்தே அமைகின்றன. இக்கட்டுரையில் மரபியல் அறிவியல் ஆய்வில் இன்றைய பெரிய கண்டிபிடிப்புகள் யாவை என காண்போம். நாம் நாமாக இயங்க, மெய்யிரக் கணக்கான உயிரணுக்கள் (cells) ஒருங்கினைந்து இயங்க வேண்டும். இவ்வுயிரணுக்களை இயக்குவது, நம் மரபணுத்தொகையே (genome). இம் மரபணுத்தொகை, எத்தகைய தன்மைகளை கொண்டுள்ளது, என்ற ஆர்வமும் ஆய்வுகளும் வெகு காலமாக தொடர்ந்து பெருகியுள்ளது.

முதல் படியாக, 1950களில்,  மரபிழை மூலக்கூறின் பரிமாணங்களை (DNA structure) அறிய ஆய்வுகள் தொடர்ந்தன. 1953இல், வெற்றிகரமாக வாட்சன் (Watson) மற்றும் கிரிக்கு (Crick) என்ற மரபியல் விஞ்ஞாணிகள்  மரபிழை மூலக்கூற்றின் பரிமாணங்களை தம் ஆய்வின் முடிவுகளை கொண்டு விவரித்தனர்.

இரண்டாம் படியாக, 1990களில், பன்னாட்டு கூட்டு முயற்ச்சியாக மனித மரபணுத்தொகையில் உள்ள மரபணுக்களின் எண்ணிக்கையும் அவை அடைங்கிய மொத்த சொற்றொடர்களையும் (DNA Sequence) மரபியல் விஞ்ஞாணிகள் ஆயிந்து ஆராயிந்தனர் (Human Genome Project).

மனித மரபணுத்தொகையானது, ஏறத்தாழ 3 தொள்ளுண் [௲௲௲] (3x109 அல்ல 3 billion) அடிப்படை மூலக்கூறுகளை (nucleotides) கொண்ட நெடுந்தொடராக கூறப்படுகிறது. இதில், மொத்தம் 20,000–25,000 மரபணுக்கள் (genes) உள்ளதாக முடிவுகளை அறிவித்துள்ளனர். ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால் இத்தனை மரபணுக்களும் வெரும் இரண்டு விழுக்காடு (2%) தான். மீதியுள்ள 98% மரபணுத்தொகை பயனெற்ற மரபிழையாக (Junk DNA) தான் வெகு காலமாக ஒதுக்கி வைத்தனர்.

ஆனால், மூன்றாம் படியாக, அண்மையில் மேற்கொண்ட பெரிதோர் பன்னாட்டு கூட்டு முயற்ச்சியில், மனித மரபணுத்தொகையில், 80%, செயல்பாட்டில் தனிச்சிறப்புகளை கொண்டது என்று ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர் [ENCODE Project - மரபிழை அங்கங்களின் தகவற்களஞ்சியம்] (மேற்கோள்: க). இம்மரபிழை தொடர்கள், மேற்க்கண்ட மொத்த மரபணுக்களின் வெவேறு கட்டுபாட்டு தளங்களாக விவரிக்க பட்டுள்ளன.  சரி, இப்புதிய கண்டுபிடிப்பின் தாக்கம் என்ன? மரபணுகளின் நேரடி பாதிப்பால் விளையும் சீர்கேடுகள் போக, மரபணுகளின் கட்டுபாட்டு தளங்களில், அதாவது ஒரு படிமேல், ஏற்படும் பாதிப்பும் உடல் சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதுதான். இவ்வுயர்நிலை மரபியல் கண்டுபிடிப்பு, மருத்துவ அறிவை கற்பனைக்கு எட்டா அளவிற்கு விரிவடைய செய்துள்ளது. 
 

மேற்கோள்
. An integrated encyclopedia of DNA elements in the human genome. ENCODE Project Consortium, Bernstein BE, Birney E, Dunham I, Green ED, Gunter C, Snyder M.  Nature. 2012 Sep 6;489(7414):57-74.





Sunday, January 13, 2013

004. பெருமூதாளரோம்


" ..................................    கல்லா இளமை!
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ,
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெரு மூதாளரோம் ஆகிய எமக்கே?"


கல்லா இளமை தானே இழந்ததை இனி நினைந்தென்ன பயன் என வருந்தி, தடி ஊன்றி நடுக்குற்று, இருமல் இடையிடையே வந்து சிலசொல் பேச பெருமூதாளராய் ஆகின்றோம் என்று 3000 ஆண்டுகளுக்கு முன்னே, இளமை நீங்கி முதுமையடையும் வாழ்வியலை புற நானூற்று பாடலொன்று வெகுசிறப்பாக எடுத்துரைக்கிறது. 

முதிர்வும் எதிர்முதிர்வும் 
மரபணுத்தொகை (Genome) ஒவ்வொரு கட்டத்திலும் வெகுசிறப்பாக கட்டளையிட, ஒரு கருவணுவில் இருந்து வளர்ந்து நாம் பிறந்து ஆளாகின்றோம். இதற்க்கான மரபணு ஆய்வுகள் நிறையவே உள்ளது. சான்றாக, பல பிறவிக் குறைபாடுகள் (congetital disorders) மரபனுத்தொகைச் சார்ந்து இருப்பதை மரபியல் ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர். அதேபோல் முதிர்வடையவும் (aging), மரபணுக்கள் துணையாக இருக்குமோ? அப்படி இருப்பினும், இம் மரபணுக்களை கொண்டு முதிர்வடைவதை நம்மால் தடை செய்யலாகுமோ அல்ல தாமதிக்க தான் இயலுமோ? இவை அனைத்தும் சிறப்பான வினாக்கள்! 

மூதாளர் மருத்துவம் (Geriatric medicine) என்பது பெருவாரியாக 65 வையதுக்கு மேற்பட்ட மூதாளர்களின் பொது உடல் நல மருத்துவம் ஆனது. இம் மருத்துவமும் அதன் மருத்துவ ஆய்வுகளும் வளர நூற்மூதாளர்களின் (centenarians) எண்ணிக்கை நான்கு மடங்காக பெருகியுள்ளதாக இங்கிலாந்தை சார்ந்த அளவையோன்று கூறுகின்றது.

மூதாளர் மருத்துவ பிரிவின் பல மருத்துவ ஆய்வுகளில் ஒரு கிளையாக எதிர்முதிர்வு (anti-aging) ஆய்வினை கருதலாம். இவ்வாய்வின் வெளியீடாக பல எதிர்முதிர்வு வழி வகைகள் பிறந்துள்ளன. உணவு (diet) மற்றும் உயிர்ச்சத்து (vitamins) வழிகள், வளரூக்கி (hormones) வழிகள், அதுபோக புதிய மரபியல் வழிகளையும் கண்டறிந்துள்ளனர்.

வெகு நாள் உயிர் வாழும் விலங்கின மரபணுத்தொகையோ, நூற்மூதாளர்களின் வாழ்வியலோ ஆராய பல கோணங்களில் புதிய நெடுவாழ் (longevity) வழிகள் கண்டறியலாம். மற்ற விலங்கினத்துக்கும், மாந்தர்க்கும் உள்ள ஒரு வேற்றுமை யாதெனில், விலங்கினங்களில் வேண்டிய அளவும், வேண்டிய வழிகளில்லும் மரபியல் செயிமுறைகளை செய்துபார்க்கலாம்.

நெடுவாழ் விலங்கான ஒரு வகை கடல் வாழ் குடை நுங்குமீன்  (Jellyfish / Turritopsis nutricula) உயிரினம் முதிர்வுற்று இறவா தன்மை (immortal) பெற்றது. இவை வேண்டுமென்றால் வயதில் பின்நோக்கி செல்லும் தன்மையும் கொண்டவை. இதை மாந்தர் (மனித) வாழ்வியலோடு ஒப்பிட்டால், அகவை அடைந்து  (வயதுக்கு வந்து) பெருமகனாகியும், வியப்பாக மையிளகி உருமாறி பிள்ளை பருவத்திற்கு வயதில் பின் நோக்கி  செல்லுதலுக்கீடு. மற்ற பெருமீனுக்கு இரையாவதை தவிர, இவைகளுக்கு இறப்பில்லை. என்ன ஒரு சிறப்பு இக்குடை நுங்குமீன்னுக்கு!

இதைபோல இறவா தன்மை கொண்டதாக இல்லாவிடினும், கிரீன்லாந்து சுறா (Greedland shark), கடல் ஆமை (Aldabra giant tortoise/Aldabrachelys gigantea), கோயி மீன் (Koi fish /Cyprinus carpio) போன்ற விலங்கினங்களில், ஒரு சில விலங்குகள் 200-400 ஆண்டுகள் வாழும் தன்மையை கொண்டவை. ஆக, இவை நமக்கு கூரும் நல்வழிகள் என்ன? சோர்வூற்றும் வகையில், இவ்வினங்களின் மரபியல் ஆய்வுகள் இன்னமும் தொடக்கநிலையில் தான் உள்ளது. இப்படி ஒரு நிலையிருக்க, நெடுவாழ் வழிகளுக்கு எங்கு திரும்புவது?

மற்றொரு உயிரினம் மரபியல் ஆய்வுக்காக வெகுநேர்த்தியாக தற்பொழுது பயனில் உள்ளது. அது தான் ஒரு வகை நூற்புழு (சிநோராப்டைட்டிசு எலெகான்சு/Caenorhabditis elegans). அளவில் 1 மிமீ நீளமும், பார்ப்பதிற்கு ஒளிகடவ (transparent), ஓரளவு அணைவற்ற (less complex) மரபணுத்தொகையை கொண்டு, பாக்டீரியாவை உணவாக உட்கொள்ளும் ஒரு நூற்புழு இது. முதன் முதலில், சிட்னி பிரனெர் (Sydney Brenner) என்ற தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானி மரபியல் ஆய்விர்க்காக இந்நூற்புழுவை பயன்படுதினார். இவ்வுயிரினத்தின் மரபியல் ஆய்வுகள் இதுவரை மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளை நமக்களித்துள்ளது. இதை தழுவி 2002 ஆண்டுக்கான நோபல் விருதினை (Nobel Prize) சிட்னி பிரனெர்க்கும், இவருடன்,  சான் சுளுச்டன் (John Sulston), இராபெர்டு ஆர்விட்சு (Robert Horvitz) ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கும் அதே ஆண்டு நோபல் விருதினை வழங்கினர். பின்னர், இதே உயிரினத்தை மரபணு மூலக்கூரு ஆயிவிர்க்காக, ஆன்றிவு பயர் (Andrew Fire), கிரைகு மெல்லோ (Craig Mello) என்ற விஞ்ஞானிகள் ஆராயிந்து புதியதோர் மரபணு மூலக்கூரு வகையினையே கண்டறிந்தனர். இவர்களுக்கும் 2006 ஆண்டுக்கான நோபல் விருதினை மருத்துவ அல்ல வாழ்வியல் பிரிவிர்க்காக வழங்கினர். அத்தனை சிறப்புகள் பொருந்திய ஒர் உயிரினம் இது. சரி, இந்நூற்புழு நெடுவாழ் வழிகளேனும் நமக்கு காட்டியுள்ளதா?

இந்நூற்புழுவின் (சி.எலெகான்சு / C. elegans) மரபணு திடீர்மாற்ற (Genetic mutations) ஆய்விலிருந்து, ஒரு வியப்பான முடிவு தோன்றியது. இதுவரை மருத்துவ ஆய்வில் புலப்படாத ஒர் உண்மையது. சி.எலெகான்சுவின்  மரபணுத்தொகையில், ஒரு மரபணு, திடீர்மாற்றங்கொள்ள அப்புழு இயல்புக்கு மாறாக 30%-50% காலம் நீட்டி நெடுவாழ் வாழ்ந்தது (மேற்கோள்: க). தற்பொழுது, இந்தியர்களின் சராசரியான வாழுங்காலம் 64.7 ஆண்டுகளாக இருக்க, இச்சிறப்பு செய்தி மருத்துவ அறிவியல் உலகத்தின் கவனத்தை உடன் ஈர்த்துள்ளது.

எந்த மரபணுவின் திடீர்மாற்றத்தினால் அப்புழுவின் வாழுங்காலம் இரட்டிப்பானது என்ற தேடுதலில், daf-2 என்ற மரபணு திடீர்மாற்றங்கொள்ள அப்படி ஒரு வியக்கதக்க முடிவு புலப்பட்டதாக மேற்கண்ட ஆய்வு கூறுகிறது (மேற்கோள்: க). இம் மரபியல் மாற்றத்தை, மாந்தர் வாழ்வியலொடு ஒப்பிட்டால், 90 ஆண்டு வயதிலும், 45 போல் தோற்றத்திலும், செயலிலும் இயங்குவதிற்க்கீடு. காலம் தான் கனியுமே தவிர, அதை தழுவின முதிர்வு உடலுக்கில்லை. ஆகா, எத்தகைய தன்மை இது! இந்த எதிர்பாரா செயிமுறை முடிவு, மேலும் இதை போல கூடுதலான மரபணு திடீர்மாற்றங்கள் வேரேதும் உள்ளதா என்ற தேடுதலுக்கு விஞ்ஞானிகளை உந்தியது. அதே போல், daf-16 என்ற மரபணுவும் நெடுவாழ் தண்மை கொண்டிருக்கும் உண்மையும் புலப்பட்டது (மேற்கோள்: க).

இயல்பில், daf-2, daf-16 மரபணுக்களுக்கு ஒர் அடிப்படை வேருபாடுண்ட்டு. இயல்புக்கு மாறாக daf-2 மரபணு திடீர்மாற்றங்கொள்ள தான் நெடுவாழ் தன்மை பிறக்கிறது. ஆனால், daf-16 இயல்பாகவே இளமையை தக்கவைக்கும் சிறப்பை கொண்ட ஒரு மரபணுவாக உள்ளது.

சி.எலெகான்சுவை தவிர மற்ற உயிரினங்களுக்கும் இந்த மரபணுக்கள் சொந்தமா? பொதுவாக, மரபணுக்களின் சொற்தொடர் (DNA sequence) ஒர் உயிரினத்துக்கும் மற்றொன்றுக்கும் வேறுபடும். அதை தழுவி அதன் இயக்கங்களும் ஏற்ற தாழ்வாக மாறுபடும். இதுவரை மரபியல் ஆய்வில் பரவலாக பயனில் உள்ள, பழ ஈ (fruit fly/Drosophila melanogaster), சுண்டெலி (mice/Mus musculus), ஆகிய உயிரினங்களில், daf-2 மரபணுவின் சொற்தொடர் சற்று வேறுபட்டிருந்தாலும், இதன் மரபணு திடீர்மாற்றங்கள் நெடுவாழ் தன்மையளிக்கிறதாக ஆய்வுகள் கூறுகின்றன. இம் மரபியல் ஆய்வுகளின் அடிப்படையில் சிந்திக்கையில், daf-2 மரபணுவிற்கு ஈடான மாந்தர் எதிருருகள் (variant / allele) குறையுள்ளதாக பெற்றிருந்தால், முதிர்வடைவதால் ஏற்படும் நோயிகளின்றி இளமையுடன் நெடுவாழ் வாழும் வாயிப்பு நமக்கு உயரும். இத்தக மாந்தர் மரபியல் ஆய்வுகள் இன்னும் தொடங்காத நிலையில் இச் சிந்தனை ஒரு கன்னிப்பகவே தற்பொழுது உள்ளது. சோர்வடைய வேண்டாம், இவ்வழி நெடுவாழ் மரபியல் ஆய்வுகள் மேலும் தொடருகின்றன. அதே போல் மாந்தர் நெடுவாழ் மரபியல் ஆய்விற்கான ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன. 

 

மேற்கோள்

. Kenyon C, Chang J, Gensch E, et.al. A C. elegans mutant that lives twice as long as wild type. Nature. 1993 Dec 2; 366(6454):461-4.