Friday, March 21, 2014

எதுசரி அதுசரி - பகுதி 2: கன்றா? குட்டியா?


இன்றைய பேச்சில் முற்றிலும் வழிப் பெயர்ந்த ஒரு வழக்கத்தை இப்பகுதியில் பார்ப்போம். தமிழில் முந்நூறாயிரம் சொற்கள் மேலே இருக்க, நமது அறியாமையாலும், திடமான ஒழுக்கம் வரையரைபடாமலும் உரிய சொற்கள் இன்று புழக்கத்தில் இல்லை. இருப்பினும், நாம் சிறிய முயற்சி எடுத்தாலே இந் நழுவலை தவிர்த்து, இழந்ததை மீட்டெடுக்கலாம்.
    
விலங்கின இளமைப் பெயர்கள் சிலவற்றை காண்போம். பொதுவாக இன்று, நாம் எல்லா இளம் விலங்கினை "குட்டி" என கூறும் வழக்கம் சரியா ? பின் எதுசரி?

புல்லுண்டு தாவியோடும் விலங்கினங்களான, ஆடு, குதிரை, மான் போன்றவையின் இளம் பருவத்தினை "மறி" என அழைக்க வேண்டும். ஆக, ஆட்டுக் குட்டி அன்று ஆட்டு மறியே சரி!
 
இதுபோல், கழுதைக் குட்டி, யானைக் குட்டி என்பது சரியல்ல, கழுதைக் கன்று, யானைக் கன்று எனக் கூறுவதே சரி! 

இப்படி, கன்றா குட்டியா என்ற சிந்தனை ஒரு புறம் இறுக்க, நாம் "கன்றுக் குட்டியின்னு" ஒன்று வைத்துள்ளோமே? அடடா"!" அது சரியன்று.
 
மேலும், மனிதர்களுக்கு குழவி (Infant) என அழைப்பது சரி! இதன்படி, பிறந்த குழந்தையை பேணும் மருத்துவப் பிரிவினை குழவி இயல் (Neonatology) எனக் கூறலாமா?

  

Tuesday, March 11, 2014

009. நின் கடுஞ்சூல் மகளே - சூலியல்


புன் கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே
நெடும் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறவி நின் கடுஞ்சூல் மகளே.

[ஐங்குறுநூறு 386, ஓதலாந்தையார், பாலைத் திணை]

வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே நன்று
நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறு வரை நாட நீ இறந்து செய் பொருளே.

[ஐங்குறுநூறு 309, ஓதலாந்தையார், பாலைத் திணை ]


மேற்க்கண்ட இரு  ஐங்குறுநூற்று படல்களில் காணப்படும் கடுஞ்சூல் மகளே, கடுஞ்சூல் சிறுவன் என்ற அசைகள், கடுமையான சூலிலே (கர்ப்பத்திலே) பிறந்த மக்கள் என்று பொருள் தருகின்றன. அதாவது, சூலிலே முதல் சூல் கடுமையானது. ஆக, இம் மருத்துவப்  பண்பினை நன்கு உணர்ந்த ஓதலாந்தையார்  தலை மகளை "கடுஞ்சுல் மகளே" எனவும் தலை மகனை "கடுஞ்சுல் சிறுவன்" எனவும் தன்னுடைய பாலைத் 
திணை பாடல்களில் குறிப்பிடுகிறார்.

இன்று, சூலியல் (Obstetrics) மருத்துவத்தில், கடுஞ்சுலின் (Primiparvous) பண்புகள் பலவினை நாம் அறிவோம். அதில் ஒன்று கருவறை வாயிலின் (Cervix Uteri)  இளகுத் தன்மை [மேற்கோள்: ]. கடுஞ்சூலில், இந்த இளகுத் தன்மை குறைவாக இருப்பதினால், குழந்தை ஈனும் தருணத்தில் தாய்க்கு குடுதலான சிரமங்கள் ஏற்படுகின்றன. இதுபோக, கருவறை வாயில் உரிய காலத்துக்குளேயே  (37 வாரங்களுக்குள்) இளகினால், குறைச்சூல் (Preterm Pregnency) பிறப்பிற்க்கு வழிவகுக்கும். உலகெங்கும் பல்லாயிரகக் கணக்கான குழந்தைகள் குறைச்சூலில் பாதிக்கபடுகின்றன. அதனால், கருவறை வாயிலின் இளகுத் தன்மையை முன்கூட்டியே அறிந்துக்கொள்ள
இராமன் விளைவு (Raman Effect) போன்ற அடிப்படை அறிவியல் நுட்பங்களோடு, பல புதிய ஆய்வுகளும் தொடங்கியுள்ளன [மேற்கோள்: ].
இம்முயற்சிகள் மூலம் குறைச்சூல் பாதிப்பினை தவிர்க்க இயலும்.   


சரி, மற்றொரு அகநானூறு பாடலை பார்ப்போம். இது, நல்லாவூர் கிழாரின் மருதத் திணை பாடல்.

                                                                    " ... ... ...

புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்,
‘கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக   
... ... ... ".

[அகநானூறு 86 , நல்லாவூர் கிழார், மருதம் திணை ]


இப்பாடலில், "புதல்வற் பயந்த திதலை" என்பது வயிற்றின் மேற்ப் பகுதியில் சூல் காலத்தில் ஏற்ப்படும் ஒரு வகைத் தழும்பு (Striae Gravidarum) [மேற்கோள்: ]. இதனை சூல் திதலை  எனக் கூறலாம்.

இப்பாடலில், திருமணப் பெண்ணிடம், ஒளிர்மிகு நகை அணிந்த நால்வர் கூடித் தம்போல் கற்பினில் வாழ வழி கூறுவதுப் போல் புலவர் இயற்றியுள்ளார். அந் நாவரும் கற்பினில் வாழ்ந்து புதல்வர்களை ஈன்றவர்கள் என்ற தகுதிக்கு சூல் திதலையைச்  சான்றாக சிறப்பூட்டுகிறார். அப்படியொரு வழக்கமும் அக்காலத்தில் இருந்திருக்கலாம். ஆக, செல்வச்சிறப்பாக 'வால் இழை', கற்ப்பொழுக்கத்தில் வாழ்ந்து புதல்வர் ஈன்றமைக்கு மருத்துவச் சான்றாக 'சூல் திதலை' என அத்துனை சிறப்புகளையும் ஈரடியில் கூறுகிறார் நல்லாவூர் கிழார்.

பைந்தமிழ் இலக்கியங்கள் அனைத்துத் துறையினர்க்கும்  பற்பலக் கோணங்களை வாரி வழங்கும் தன்மையுடையுது. குறிப்பாக, அவற்றுள் செறிந்துள்ள அறிவியல் மருத்துவக் கோணங்கள் பண்டைய தமிழினம் ஒரு அறிவார்ந்தக் கூட்டம் என்று தெள் ஒலி தெரிக்க பறைசாற்றுகின்றன என்றால் அது மிகையாகது.


[கூடுதல் சூலியல் இலக்கியத் தொடர்புகள்: புளிங்காய் வேட்கைத்து - மசக்கை]



மேற்கோள்
. Beyond cervical length: emerging technologies for assessing the pregnant cervix. Feltovich H et. al. Am J Obstet Gynecol. 2012 Nov;207(5):345-54

Common Skin Conditions During Pregnancy. Tunzi M et. al. Am Fam Physician. 2007 Jan 15;75(2):211-8.