Friday, February 28, 2014

008. இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே


யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்
புலி செத்து, வெரீஇய புகர் முக வேழம்,
மழை படு சிலம்பில் கழை படப் பெயரும்
நல் வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.

[அகநானூறு 12, கபிலர், குறிஞ்சி திணை]

மேற்கண்ட அகநானூற்று பாடலில் 2000 ஆண்டுகளுக்கு முன் இரு தலைப் பறவையை பிரியா துவரா நட்பிற்கு உவமையாக கபிலர் குறிப்பிடுகிறார் .
ஒத்த இரட்டையர்கள்  (Indentical Twins) ஒரே கருவில் தோன்றி தொடக்கத்திலேயே முழுமையாக பிரிந்து வளர்ந்து பிறப்பர். ஆனால், ஒட்டிய இரட்டையர்கள் (Conjoined Twins) ஒரே கருவில் தோன்றி இடையில் முழுமையாக பிரியாமல் ஒட்டியே பிறப்பர்.
இயல்பாக, ஒரு கருவணுவில் (Zygote) இருந்து கருக்குமிழ் (Blastocyst)  உருவாகி அதன் மேற்பகுதியான  கருவுறை (Chorion) தோன்றி, கருவறை (Uterus) மேல் பகுதில் இணைந்து வளரும். ஒத்த இரட்டைப் பிறப்பானது, ஒரு கருவானாலும் தொடக்கத்திலே  முழுமையாக பிளவுற்று தனி தனி கருவுறையில் கருவறையின் வெவ்வேறு பகுதியில் இணைந்து சூல் முதிர வளரும்.
       
மாறாக, ஒட்டுப் பிறப்பானது ஒரு கருவானாலும் சரிவர பிளவுறாமலோ (பிளவுக் கோட்பாடு), அல்லது பிளவுற்று பின் ஒட்டியோ (ஒட்டுக் கோட்பாடு), ஒரே கருவுறையில் வளரும். தலையொட்டு (Craniopagus), மார்பொட்டு (Thoracopagus), மேல்வயிரோட்டு (Xiphopagus ),அடிவயிரொட்டு (Omphalopagus), இடுப்பொட்டு (Ischiopagus), பின்இடுப்பொட்டு (Pyopagus) என  ஒட்டிப் பிறக்கும் பிறப்புக்களை ஒட்டி இருக்கும் உறுப்பினை கொண்டு பாகுபடுத்தலாம் [மேற்கோள்: ].

மேற்கண்ட அகநானூற்று பாடலில் குறிப்பிட்ட ஒட்டுப்பிறப்பானது இரு தலை ஓர் உயிர் (கவையோட்டு/பக்கஒட்டு) (Dicephalic parapagus) வகையை சேர்ந்தது [மேற்கோள்: ]. இருப்பினும், இவ்வகை ஒட்டுப்பிறப்பின் காரணிகள் இதுவென சரிவர இன்னும் விளங்கவில்லை.    இதைத் தாண்டி, விலங்கினம் இடையேயும்  இவ்வகை ஒட்டுப்பிறப்புகளும் காணப்படுகிறது.

கபிலரின் உவமையை உற்று நோக்குகையில், பிரிக்க இயலாதன்மை பொருந்திய பிறப்பாகவும், ஆக, அது தனிமை இல்லா நிலைமையை  பெற்றுள்ளது. அது போக, ஒட்டியே இருப்பினும் துவரா சிறப்பும் பெற்று அறிவியல், உளவியல் கூறுகளை ஏந்தியுள்ளது.   

தமிழ் இலக்கியங்கள் வெறும் காதலும் வீரமும் ததும்பும் காவியங்கள் மட்டும் அல்ல, அவை பல அறிவியல் கூறுகள் செறிந்த படைப்புகள் என்பதை உணர உணர்த்த வேண்டும்.




மேற்கோள்
. Echocardiographic assessment of conjoined twins Andrews RE , et. al . Heart. 2006 March; 92(3): 382–387.



No comments:

Post a Comment