Thursday, July 31, 2014

011. நெல்லின் நேரே வெண் கல் உப்பு


      பெருங்கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர்
      இருங்கழி செறுவின் உழாஅது செய்த
      வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி
      என்றூழ் விடர குன்றம் போகும்
5    கதழ் கோல் உமணர் காதல் மட மகள்
      சில் கோல் எல்வளை தெளிர்ப்ப வீசி
      நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச்
      சேரி விலைமாறு கூறலின் மனைய
      விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய
10  மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எனக்கு
      இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும்
      மாமூ தள்ளல் அழுந்திய சாகாட்டு
      எவ்வம் தீர வாங்குந் தந்தை
      கை பூண் பகட்டின் வருந்தி
      வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே.

[அகநானூறு 140, அம்மூவனார், நெய்தல் திணை ]



உப்பு என்னும் உண் பொருள் தமிழர்கள் வாழ்வியலில் ஒரு சிறப்பு  இடத்தை பெற்றுள்ளது. பண்டைய தமிழ் இலக்கியங்களில், நெய்தல் திணையில் எண்ணிறைந்த பாடல்கள் உப்பையும் அதனை செய்து விற்கும் உமணர் வாழ்வையும் விவரித்துள்ளது. 

மேற்க் கண்ட அம்மூவனார் இயற்றிய அகநானூறு பாடல், உப்பு விளைவிக்கும்  தொழில்நுட்பம் ஒன்றை அழகாக நமக்கு விளக்குகின்றது. "இருங்கழி செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி " (அடிகள் 2,3), அதாவது, உப்பளத்தில் உழாமல் விளையும் உப்புக்கு ஒரு விலையிட்டு. அந்த  விலைக்கு நெல்லுக்கு  இணையாக வெண் கல் உப்பினை  பண்டம் மாற்றி உமணர் விற்றனர் என்று இப் பாடல் கூறுகிறது.

மற்றுமொறு நெய்தல் திணையில் முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்  இயற்றிய பாடல்,  விளைந்த உப்பை வரிசை வரிசையாக வண்டிகளில் ஏற்றி கடற்கரையில் ஒரு இடம் கூடி, பெருங்கழனி உழுவும் உழவர் போல வறுமையில் இரந்தோர்க்கு நிறைய கொடுக்கும் வள்ளல் தன்மையும், அதுபோக விலையிட்டு விற்கும் வணிக நேர்த்தியும் பெற்றுரிந்ததாக கூறுகிறது (அடிகள் 5-11).  

       நெடும் கயிறு வலந்த குறுங்கண் அவ் வலை
       கடல் பாடு அழிய இன மீன் முகந்து
       துணை புணர் உவகையர் பரத மாக்கள்
       இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி
5     உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும்
       ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ
       அயிர் திணி அடை கரை ஒலிப்ப வாங்கிப்
       பெருங் களம் தொகுத்த உழவர் போல
       இரந்தோர் வறுங்கலம் மல்க வீசி
10   பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக்
       கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ
       பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
       மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
       தண் நறும் கானல் வந்து நும்
       வண்ணம் எவனோ என்றனிர் செலினே?

[அகநானூறு 30,முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன், நெய்தல் திணை]

உப்பு உற்பத்தியும் அதன் வணிகமும் தொண்று தொட்டு தமிழர்கள் வாழிவியலில் பிணைந்த ஒன்று என இது போன்ற தொண்மையான எண்ணிறைந்த பாடல்கள் வழியே தெளிவாக நமக்கு புலப்படுகின்றது.

சரி, வரலாற்றில் இன்னும் சற்று பின் நோக்கி செல்வோம். உணவில் உப்பு சேர்த்து உண்ணும் பழக்கம் எக்காலம் தோன்றிற்று? அதன் இன்றியமையாத தொடக்கநிலை தேவை எதுவாக இருந்தது? 

உப்பும் பரிணாம வளர்ச்சியும்

பரிணாம வளர்ச்சியில், கடல் வாழ் உயிரினமாக இருந்து பின் நில வாழ் உயிரினமாக உருவெடுத்து கடல் உப்பை விட்டு வெகு காலம் விலகி இருந்தோம். அதற்கேற்ப, நில வாழ் உயிரினங்களின் மரபணுத் தொகையும் பல்லாயிரம் ஆயிரம் ஆண்டுகளா சிறு சிறு மாற்றங்களுக்கு ஆட்பட்டு, உப்பினை பிரிந்தே வாழவும் முடிந்தது. சான்றாக, இன்றும் விலங்கினங்கள் பெரும்பாலும் உப்பு உண்ணுவதில்லை. தாவரம் உண்ணும் விலங்கினங்கள் வெகு குறைவாக தான் உப்பு உட்கொள்ளும். வேட்டையாடி தசையுண்ணும் விலங்கினங்களும் பெரும்பாலும் உப்பு உண்ணுவதில்லை. குறிப்பாக, விலங்கினங்களின் குருதியில் தான் உப்பு மிகுதி. அதுவும், வேட்டையில் குருதி இழந்து உண்ணும் தசைகளில் உப்பு குறைவாகவே இருக்கும் [மேற்க்கோள்: க]. 

ஆக, இவ்வாறு இன்றைய நில வாழ் உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி இருக்க, மாந்தர்களுக்கு மட்டும் எப்படி உப்பு தேவையானது. திடிரென கடல் உப்பை நாடிய நிகழ்வு எதற்கு? இருங்கழி செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கதை என்ன ?

 உணவில் உப்பு சேர்த்து உண்ணும் வழக்கம் ஏறக் குறைய கடந்த 10,000 ஆண்டுகளுக்குரிய வரலாறு. மேற்க் கண்ட இரு அகநானூறு பாடல்கள் முதல் பல தொண்மையான தமிழ் இலக்கியங்களின் பாடல்களில் உப்பு உண்ணும் குறிப்புகள் உள்ளன.

உடலும் நீரும்

உப்பின் தலையான பண்பு யாதெனில், உடலில் உப்பு எவ்வழியோ நீரும் அவ்வழி. கொளுத்தும் வெயிலில், வியர்வை சிந்தும் வினைஞர், வியர்வையில் நீருடன் உப்பையும் இழக்கிறார். அதுபோல், வயிற்றுப்போக்கு நோயிலும் நீருடன் உப்பையும் நாம் உடலில் இழக்கிறோம். இதுபோன்ற திடீர் நீர், உப்பு இழப்பில் இருந்து உயிர் காக்கும் இன்றியமையா தேவையே உப்பு பயன்பாட்டின் தொடக்கமாக இருந்திருக்கும் என ஆய்வொன்று கணிக்கிறது [மேற்க்கோள்: க]. இத் தனி சிறப்பினை தவிர்த்து, சுவை போன்ற அரிய பல நுண்ணிய பண்புகளும் உப்புக்கு உண்டு.

நிரவலாக, 70 கிலோ எடையுடைய மாந்தரின் உடலில், நீர்ப் பகுதி மட்டும் 40-45 கிலோ  இருக்கும். ஆக, உடலின் திட பகுதியை  விட, நீர் பகுதியே மிகுதி. ஆம் இது வியப்புக்குரியது தான்! "நீரின்றி அமையாது உலகு" என்ற பொய்யாமொழி  புலவரின் கூற்றுப் போல், நீரின்றி அமையாததும் உடம்பு. உடலில் பெரும்பாலான நீர், உயிரணுக்குள் அதாவது அக நீர்ப் பகுதியாக (Intracellular fluid) உள்ளது. ஏறத்தாழ 12-14 லி. மட்டுமே உயிரணுக்களுக்கு வெளியே உள்ளது. இப் புற நீர்ப் பகுதியில் 5 லி. குருதியும் உள்ளடக்கம்.  உடலின் அந்தந்த பாகங்களின் தேவைக்கேற்ப குருதி நீரை கொண்டுச் சேர்க்கும்.

குருதியில் உப்பு மிகுதியானால், நாளடைவில் உப்புடன் நீரும் பெருகி குருதி உயர்வழுத்தம் ஏற்படக் கூடும். மாறாக, உப்பு குறைந்தால் நாளடைவில் அழுத்தமும் குறையும். சராசரியாக, நாளொன்றுக்கு 3-5 கிராம் உப்பு வரை உண்ணலாம். ஆனால், சிறிது சிறிதாய் பழக்க வழக்கங்கள் மாறி 10-20 கிராம் வரை இந்நாளில் நாம் உட்கொள்கிறோம்.

குருதியழுத்த ஆய்வுகள்

அண்மையில், மேற்கொண்ட ஆய்வுகளின் படி, நெய்தல் நில வாழ் மக்கள், சூழல் நிமித்தமாக இயல்பிலேயே கூடுதலான உப்பு உட்கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். இவர்களில், மற்ற நில மக்களை விட குருதியழுத்தமும் கூடுதலாகவே காணப்படுகிறது. நேர்மாறாக, முல்லை நில வாழ் பழங்குடி இனம் ஒன்று, இயல்பில் நாளொன்றுக்கு ஒரு கிராமுக்கும் குறைவாகவே உப்பு உட்கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். சான்றாக, அமேசான் காட்டுப் பகுதி வாழ் மக்கள் இனம் ஒன்றில் குருதியழுத்தம் குறைவாகவே காணப்படுகிறது. ஆக, இயல்பு நிலைகளில், குருதியழுத்தம் உண்ணும் உப்பு அளவினை தழுவியே பெரும்பாலும் அமைகிறது.

இது தவிர, குருதி உயர்வழுத்தம் உண்டாக்கும் காரணி உணவு சார்ந்ததா உணர்வு சார்ந்ததா என்ற கேள்விக்கு விடையளிக்கும் ஆய்வொன்று தகைவின்றி வாழும் இத்தாலிய குருமட வாழ் மாடக்கன்னிகள் இடையில் நடந்தது. ஒரே அளவு உப்பு உண்ணும் குருமடம் வெளியில் செவ்வன வாழும் மக்களை ஒப்பிட்டு பார்க்கையில், குருமட வாழ் துறவிகளுக்கு குருதியழுத்தம் உணர்வு சார்ந்து குறைவாகவே காணப்பட்டது.

உடலில், உப்பு, நீர் அளவுகளை பெரும்பாலும் கட்டுப்படுத்துவது சிறுநீரகம். குறிப்பாக, சோடியம் குளோரைடு சேர்மமான உப்பின் சோடியம் மின்மி மூலமாக தான் உடல் நீர் அளவை சிறுநீரகம் கட்டுப்படுத்தும்.

சிறுநீரகத்தின் நுண்கூறு இயல்

சிறுநீரகத்தின் அடிப்படை இயக்க அலகானது சிறுநீரகத்தி என்னும் பகுதி. சிறுநீரக உயிரணுக்கள் இடுக்கின்றி ஒரே அடுக்கில் ஒரு வளைவி போல் அமைந்து, அவ் வளைவிகள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, அண்மையில் இருந்து சேய்ப் பகுதி வரை ஒரு நுண் புழலாய் (மென்மையான; புழல் + காய் = புடலங்காய்) அமைந்துள்ளது. எப்படி மகளிர் அணியும் பொன் வளையல்கள் ஒன்றின் மேல் ஒன்று வைத்து, அவைகளின் மையங்கள் ஒரே அச்சில் நிற்க்க அடுக்கினால் ஒரு (திடமான) குழலாய் அமையுமோ அதுபோல். நுண்புழலின் அகப் பகுதியில் குருதி வடிகப் பெற்று, அது பல மாற்றங்களுக்கும் உட்பட்டு சிறுநீர் உருவாகும். 

குறிப்பாக, சிறுநீரகத்தியின் பந்தூள்குழிசி (glomerulus) பகுதியில் உள்ள சல்லடை வழியாக, குருதியில் இருந்து மற்ற கழிவு பொருட்களுடன்,  நீரும் சோடியமும் பிரித்து வடிகப்படுகிறது. வடிகப்பட்ட மொத்த சோடியத்தில், ஏறத்தாழ 60 விழுக்காடு அண்மைச் சுருள் நுண்புழலிலும் (Proximal convoluted tubule), 24 விழுக்காடு என்லேயின் வளைவிலும் (Henle loop), 10 விழுக்காடு சேயச் சுருள் நுண்புழலிலும் (Distal convoluted tubule),  4 விழுக்காடுக்கும் சற்று குறைவாக சேகரிக்கும் கானிலும் (Collecting duct) உறிஞ்சபட்டு பின் குருதிக்கே அனுப்பபடுகிறது. இதற்க்கு ஏதுவாய் நுண்தமனிகள் நுண்புழலை ஒட்டியே பக்கவாட்டில் அமைந்துள்ளது. உறிஞ்சபடாத எஞ்சியுள்ள கழிவு பொருட்கள் சிறுநீரில் வெளியேறுகின்றன.
  

ஆண்டு ஒன்று கழிகையில் 
   அகவை ஒன்று கூடும் 
வீழ்ச்சி என்று வருகையில் 
  விழுக்காடு ஒன்று குறையும்
நாற்பது அன்று மலர்கையில் 
  நலம் பேண வேண்டும்.

முதிர்ச்சியினால், இயல்பிலே அகவை 40தில் தொடங்கி ஆண்டொன்றுக்கு 1 விழுக்காடு வீதம் சிறுநீரகம் தன் செயல் திறனை இழக்கின்றது [மேற்க்கோள்: உ]. உட்கொள்ளும் உப்பு  இரையக குடல்பாதை வழியாக குருதியில் சேர்கின்றது. ஆகையால், உண்ணும் உப்பின் அளவு இச் சிறுநீரகம் செயல் இழப்பிற்க்கு ஏற்ப குறைக்காமல் உண்ணும் நிலையில் குருதி உயர்வழுத்தம் ஏற்படும். குருதி உயர்வழுத்த காரணிகளில் இயல்பான ஒன்றும் இது. 

உப்பு (சோடியம்), நீர் பிறழ் ஓம்புமதி (Homeostasis)

உயிரணுக்குள் உப்பு, நீர் போன்ற மின்மிகளை, மூலக்கூறுகளை கொண்டுச் செல்வதும், வெளிக் கொணர்வதும் அதன் மென்சவ்வில் (Plasma Membrane) அமைந்துள்ள கடத்திகளும் (Transporters), வாய்க்கால்களும் (Channels).

கடத்திகள் அடிப்படையில் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, அடர்த்தி வாட்டத்தில் இயங்குவது. இவை மின்மிகளை, மூலக்கூறுகளை கண அடர்த்தி பகுதியில் இருந்து, அடர்த்தி நலிந்த பகுதிக்கு இறைக்க உதவும். மற்றொண்டு, வேதியல் திறனால் இயங்குவது. திறன் ஏற்றிகள் இவ்வகையைச் சேர்ந்தது. இவை அடர்த்தி நலிந்த பகுதியில் இருந்து கண அடர்த்தி பகுதிக்கு, அடர்த்தி வாட்டத்திற்கு எதிராக மின்மிகளை வேதியல் திறன் கொண்டு ஏற்றி இறைக்கும்.

கடத்திகளின் உட்பிரிவு, நேர்கடத்தி, எதிர்கடத்தி, தனிக் கடத்தி வகைகள் ஆகும். நேர்கடத்தியானது, அதற்குரிய மின்மியுடன் மற்றொரு மின்மியோ, மூலக்கூறோ ஒரே பக்கவாட்டில் கடத்தும். அதாவது, உயிரணுக்களில் புறம் இருந்து அகமோ, அகம் இருந்து புறமோ ஒரே பக்கவாட்டில் கடத்தும். மாறாக, எதிர்கடத்திகள், அதற்குரிய மின்மியுடன் மற்றொரு மின்மியோ, மூலக்கூறோ எதிர் பக்கவாட்டில் கடத்தும். அதாவது, ஒன்று புறம் இருந்து அகம் செல்ல, மற்றொன்று அகம் இருந்து புறம் செல்லும். தனிக் கடத்திகள், அதற்குரிய மூலக்கூறை மட்டுமே தனியாய் கடத்தும். கடத்திகள் போலவே வாய்க்கால்களில் வேறு உட்பிரிவுகள் உண்டு.

சிறுநீரகத்தியில், சோடியம் மின்மி கடத்திகள் மேற்கண்ட வகைகளில் உள்ளன.  இவைபோக, சோடியம் வாய்க்காலும் உண்டு. அவை ஒன்றொன்றும் சிறுநீரகத்தியின் பகுதிகேற்ப அமைந்துள்ளன. இக் கடத்திகள், வாய்க்கால்கள் செய்யும் வார்ப்பு அச்சான மரபணுக்களில் பிழை நேர்ந்தால், சிறுநீரகத்தியின் பகுதிகளில் பழுதுபட்ட கடத்திகளும், வாய்க்கால்களும் செய்து பொருத்தபடும். இதனால், சோடியம் உறிஞ்சபடும் திறனில் சீர்கேடுகள் ஏற்பட்டு, உடலின் நீர் உப்பு அளவுகளில் ஏற்றத் தாழ்வு உண்டாகும்.

பெரும்பாலான சோடியம் அண்மைச் சுருள் நுண்புழல்  பகுதியில் சோ+/+
(Na+/ H+) எதிர்கடத்தி மூலமாக புழலில் வளைவியாய் அமைந்த உயிரணுக்களுக்குள் புகுந்து பின் அவைகளின் புற அடி பகுதியில் உள்ள சோ+/பொ+ (Na+/K+) திறன் ஏற்றி வழியாக நுண்புழல் புற பகுதியின் தமனிக்கே செல்கின்றது. அதாவது, அகம் புகுந்து புறம் செல்லும் சோடியம்!

இதுபோல, என்லேயின் வளைவில், சோபொ2கு (NaK2Cl) நேர்கடத்தி வாயிலாக நுழைந்து பின் தமனிக்கும், சேயச் சுருள் நுண்புழலில் சோ+/கு- (Na+/Cl-) நேர்கடத்தி வாயிலாக நுழைந்து பின் தமனிக்கும், சேகரிக்கும் கானில் மட்டும் மேலணி சோடியம் வாய்க்கால் (ENaC) வழி ஓடி பின் தமனிக்கும் செல்கின்றது.
 
மரபணுக்களின் நேரடி வார்ப்பு அச்சுப்பிழைகளில் இரு வகையுண்டு, ஒன்று பிழையால் செயல் இழப்பு மற்றொன்று, செயல் பெருக்கல்.

சான்றாக, லிட்டிலின் குறித்தொகுப்பு (Liddle's Syndrome) பழுதுபட்ட ENaC சோடியம் வாய்க்கால், சேகரிக்கும் கானில் பொருந்தும்போது, அச்சுப்பிழையால் செயல் பெருகி இயல்புக்கு மிகுதியாய் சோடியம் குருதியில் சேர்கின்றது. லிட்டிலின் குறித்தொகுப்பு உள்ளவர்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுவத்தின் மூலம் குருதி உயர்வழுத்ததை சரி செய்யலாம்.

லிட்டிலின் குறித்தொகுப்பின் மறுமுகம் அச்சுப்பிழையால் செயல் இழப்பு நேர்ந்து சோடியம் குறைபாடும்  உண்டாகும். 

இதுபோல், கிட்டெல்மான் குறித்தொகுப்பு (Gitelman Syndrome), சேயச் சுருள் நுண்புழலில் உள்ள சோ+/கு- (Na+/Cl-) நேர்கடத்தி அச்சுப்பிழையால் செயல் இழந்தும், பார்தார் குறித்தொகுப்பு (Bartter Syndrome) என்லேயின் வளைவில் உள்ள சோபொ2கு (NaK2Cl) நேர்கடத்தி அச்சுப்பிழையால் செயல் இழந்தும் சோடியம் குறைபாடு ஏற்படுகிறது. சோடியம் தேவைக்கு கீழ் அளவு குறைந்தாலும் ஆபத்து தான்! மேற்கண்டவாறு, ஏற்றத் தாழ்வு நிகழாமல், தேவையின் அளவு பிறழாமல் காக்கும் நிகழ்வே பிறழ் ஓம்புமதி ஆகும்.


"நெடும் கயிறு வலந்த குறுங்கண் அவ் வலை
கடல் பாடு அழிய இன மீன் முகந்து..."

[அகநானூறு 30, அடி 1,2, முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன், நெய்தல் திணை]

நெடும் கயிறு கொண்டு குறுங்கண் அமைய பின்னிய அழகிய வலையில் கடல் சென்று அதன் பீடு அழிய அங்கு நீந்திய மீன் குழுக்களை முகந்தனர் என்று முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதனின் பாடல் சொல்லும் வலைப்பின்னல் போலவே, அமைப்பில் உயிரணுக்களின் மென்சவ்வினை தாங்கி நிற்கும் ஒரு வகை சட்டகம் உள்ளது. இதன் சட்டங்களை பிணைப்பது அடுஊசின் (Adducin) என்ற ஒரு வகை பிடி.

மரபணுக்களின் நேரடி வார்ப்பு அச்சுப்பிழைகள் போக, மறைமுகமாய் அடுஊசின் பிடி பிழையாய் அமையும் போது, புற அடி பகுதியில் உள்ள சோ+/பொ+ (Na+/K+) திறன் ஏற்றிகளின்  செயல் பெருகி இயல்புக்கு மிகுதியாய் சோடியம் கூடி உயர்வழுத்தம் உண்டாகும்.

எமிய மருந்து (Personalized Medicine)
 
மேலே குறிப்பிட்டது போல், ஒவ்வொரு குறைபாடுக்கும் தனியொரு மருந்தோ, முற்றிலும் குணபடுத்தும் வழியோ தேவை. வருங்காலத்தில், யாருக்கு எவ்வித குறைபாடு உண்டு என்று நோய் நாடி, நோய் முதல் நாடி, அதற்கேற்ப துள்ளியமான வழி வகுக்கும் நிலை அமையும். அவ்வாறு காலத்தொட்டிய எமிய மருந்தின் வளர்ச்சி வரும் வரை,
 

"உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது 
மிக்கற்றால் நீள விடல்." திருக்குறள் 1302.


உணவு அளவுக்கு ஏற்ப உப்பு என்று வள்ளுவ பெருந்தகை அருளியது போல், மருத்துவரை அனுகி தன் தேவை அளவறிந்து உப்பு சேர்த்தல் யாவர்க்கும் நலமே.

 




மேற்கோள்
  
க. Links between dietary salt intake, renal salt handling, blood pressure, and cardiovascular diseases.  Meneton P, Jeunemaitre X, de Wardener HE, MacGregor GA.  Physiol Rev. 2005 Apr;85(2):679-715. Review.

உ. Adv Chronic Kidney Dis. The aging kidney: physiological changes. Weinstein JR, Anderson S. 2010 Jul;17(4):302-7.



தொடர்புள்ள கட்டுரை
010. மயங்கு வியர் பொறித்த நுதலள் - ஓட்டம்

   



Friday, April 25, 2014

எதுசரி அதுசரி - பகுதி 3: அரிசிப்பொரி சோளப்பொரி



அம்மூவனார்: கபிலா என்ன எண்ணிய வண்ணம் உள்ளாய்?

கபிலர்: ஒன்றும் இல்லை அம்மூவனா! அண்மையில் நெஞ்சை நெருடிய ஒரு பேச்சு, எழுத்து வழக்கை பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தேன். பெரிய திரையரங்கு, பூங்கா போன்ற  கேளிக்கை இடங்களில் கவனித்து கவலையுற்ற வழக்கு தான் அது.

அம்மூவனார்: எதை குறித்து கூறுகிறாய்?

கபிலர்:  மாமூலனார்  இயற்றிய பாலைத் திணை அகநானுறு பாடல் ஒன்று உங்களுக்கு நினைவில் உள்ளதா? 

அதாவது,

"... ... ...
அறு நீர்ப் பைஞ்சுனை ஆம் அறப் புலர்தலின்
உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும்
வழங்குநர் இன்மையின்... ... ... "

[அகநானுறு 1, அடி 13, மாமூலனார், பாலைத் திணை]

என்று வரும் அந்த பாடல்.

அம்மூவனார்: சிறிது விளக்கமாய் கூறு.

கபிலர்:  இந்த அகநானுறு பாடலில் பாலைத் திணையை தழுவி கடும் வறட்ச்சி நிலையை மாமூலனார் விவரிக்கிறார்.  பைஞ்சுனை வற்றும் அளவுக்கு கொளுத்தும் வெயில். அந்த வெப்பத்தில், நெல்(அரிசி) தூவினால், பொரியாக மாறும் என மிகச்சிறப்பாக அரிசிப்பொரி செய்யும் நுட்பத்தை அன்றே தன் பாடலில் விளக்கியுள்ளார்.  

அம்மூவனார்: ஆம், அதற்கு?

கபிலர்:  தென்னகதில் ஆயிரம் கணக்கான ஆண்டுகளாக தொண்று தொட்டு வழக்கில் உள்ள ஒரு சிற்றுண்டி அரிசிப்பொரி. இவ்வரிசிப்பொரியில், காரப்பொரி , கடலைப்பொரி, உப்புபொரி, இனிப்புபொரி என எத்தனையோ வகைகள் இருக்க ஒரு வகை அரிசிப்பொரியாவது ஒரு திரையரங்கிலே விற்க்கபடுகிறதா? ஏன் பெரிய திரையரங்கிலோ அல்லது அது போன்ற பெரிய கேளிக்கை இடங்களிலோ அரிசிப்பொரிக்கு இடம் இல்லையா? ஒரு வாலி என்ன, ஒரு கோணிபை நிறைய 1000 ரூபாய் கொடுத்து வாங்கி உண்ணுங்கள், படம் பாருங்கள். யார் வேண்டாம் என்றது?

அம்மூவனார்: சரிதான்!

கபிலர்:  இவ் வழக்கு ஒரு வகை கவலை தர, சோளப்பொரி சிக்கலுக்கு வருவோம். இதற்க்கு பரவலாக எல்லோருக்கும் பழகின வேற்று மொழிப் பெயர் "பாப்கான்". ஏன் "யானை பசிக்கு சோளப்பொரி " என்றொரு பழ மொழியும் உண்டல்லவா? அரிசிப்பொரி தான் நகர்ப்புற பெரிய திரையரங்குகளில் விற்க்கபடவில்லை என்றாலும், "சோளப்பொரி" என்று தமிழிலே பெயரிட்டாவது விற்க்ககூடாதா ? இவ்வழக்கு சரியா? இது அவலம் இல்லையா?

அம்மூவனார்: உண்மை தான். ஆனால், இந்த குறிப்பிட்ட தொழில் நுட்பம் இங்கு உருவானதா?

கபிலர்:  திரையிடும் அறிவியல் நுட்பம் கண்டறிந்தது எடிசன்
என்பதினால் அவர் படம் மட்டுமா உலகெங்கும் திரையிடப்படுகின்றது. அவர் மேல் உள்ள நன்றி உணர்வாலோ, அல்ல, வரலாற்று குறியீடு நிமித்தமாகவோ அவருக்கு சிலை தான் வடித்து நினைவுக் கூர்ந்தோமா? இல்லையே! திரைமேல் ஒளிப்பதும் தமிழ், திரைபின் ஒலிப்பதும் தமிழ், பின் தின்பதிற்கு "பொரி" போதாதா? திருத்திக்கொள்வோம் தீங்கில்லை இனி!

அம்மூவனார்: சரிதான்!

கபிலர்:  நீங்கள் எப்படியோ, நான் இனி மேல் தமிழக திரையரங்குகளில் அரிசிப்பொரி, அல்லது குறைந்த அளவு, "சோளப்பொரி" என்று எழுதியாவது விற்றால் தான் அந்த திரையரங்கம் செல்வதென சூள் கொண்டுள்ளேன். உவகையாக இச்சூளை நீங்கள் "அரிசிப்பொரி சோளப்பொரி கலகம்" என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள்!!   

   

Saturday, April 12, 2014

010. மயங்கு வியர் பொறித்த நுதலள் - ஓட்டம்


வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும்
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்
உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ
மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென
முயங்கினள்
வதியும் மன்னே ...

[அகநானுறு 17, அடி 1-5, கயமனார், பாலைத் திணை]


இந்த அகநானுறு பாடல் வெகுச் சிறப்பாக  இளம் பெண்கள் விளையாடி களைப்புருவதை நம் முன் காண்பிக்கிறது. இப்பாடலில், தன்  செல்வம் செழித்த வீட்டில் வசிக்கும் போது, சக இளம் தோழிகளுடன் சிறிது நேரம் பந்து விளையாடி, கழங்கு விளையாடி, களைப்புற்று தன் மேனி தளர்வதை தாயிடம் முறையிட்டு, நெற்றியில் விளைந்த வியர்வையால் (தன் மேனி) குளிர தாயை தழுவினாள் என்று கயமனார்  பாடுகிறார். இவ்வைந்து அடிகளில் தான் எத்தனை தகவல்!

மாந்தர்களுக்கே உரிய தனிச் சிறப்பு பண்புகளில் ஒன்று வியர்வை. கயமனார்  நன்கு உணர்ந்து பாடியது போல், உடலில் தசைகளின் இயக்கத்தினால் உருவாகும் வெப்பத்தை தணியச் செய்ய வியர்வை உருவாகின்றது. நடப்பதை காட்டிலும் ஓட்டத்தில் 10 மடங்கு வெப்பம் பெருகும்.

பரிணாம வளர்ச்சியில் வெகு தொலைவு சென்று இரை தேடுவதிர்க்கும், தன்னை மற்ற கொடிய விலங்குகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இச் சிறப்பு பண்பு பேர் பங்களித்துள்ளது (மேற்கோள் க). இப் பண்பினை பெற்ற மாந்தன் ஒரு நாளில் 10 கி. மீ. தூரத்தை கடக்க இயலும். அடர்த்தியான முடியும் பிடரியும் உடல் மேல் கொண்ட விலங்கினங்கள் பெரும்பாலும் மூச்சிறைத்தே வெப்பத்தை தணித்துக்கொள்ளும். இதனால், பாயிச்சலில் வேகமாக ஓடினாலும் வெயிலில் வெகு தொலைவு ஓட இயலாது. உதாரணமாக, வெயிலில் சிறுத்தையால் பாயிச்சலில் 1 கி.மீ. மேல் ஓட இயலாது.  

நாய், நரி போன்ற விலங்குகள் ஒரு நாளில் 10-20 கி.மீ. வரை மித ஓட்டத்தில் ஓடகூடியவை. ஏன், ஒரு பனிநில நாய் வகை 50 கி.மீ. வரை பனி காலங்களில் கடுங்குளிரில் ஓடகூடியவை. இருப்பினும், வெயிலில் இவ் வோட்ட திறனை  பெரிதளவு இவை இழக்கும். காரணம், வெப்பத்தை தணித்துக் கொள்ளும் ஆற்றல் சிறப்பாக இவ் விலங்கினகளில் இல்லை என்பது தான். பொதுவாக உடலில் ஏற்ப்படும் வெப்பத்தை வியர்வையால், மூச்சிறைபால், நாவால் மேனி மேல் துவட்டியும் விலங்கினங்கள் தணித்துக் கொள்ளும். ஆனால், ஓட்டத்தில் பெரும்பாலும் மூச்சிறைபாலே இவ் விலங்குகள் வெப்பத்தை தணிக்க முடியும்.

ஆக, உச்சி வெயிலில், மூச்சிறைப்பை குறைத்து வியர்வை கொண்டு மாந்தர் தம்மால் மட்டுமே வெகு தொலைவு ஓட இயலும். ஓடினாள், ஓடினாள், மயங்கு வியர் பொறித்த நுதலள் ஓடினாள்!

 

மேற்கோள்

. The First Humans - Origin and Early Evolution of the Genus Homo, Chapter 8, 2009, Springer.

  

Friday, March 21, 2014

எதுசரி அதுசரி - பகுதி 2: கன்றா? குட்டியா?


இன்றைய பேச்சில் முற்றிலும் வழிப் பெயர்ந்த ஒரு வழக்கத்தை இப்பகுதியில் பார்ப்போம். தமிழில் முந்நூறாயிரம் சொற்கள் மேலே இருக்க, நமது அறியாமையாலும், திடமான ஒழுக்கம் வரையரைபடாமலும் உரிய சொற்கள் இன்று புழக்கத்தில் இல்லை. இருப்பினும், நாம் சிறிய முயற்சி எடுத்தாலே இந் நழுவலை தவிர்த்து, இழந்ததை மீட்டெடுக்கலாம்.
    
விலங்கின இளமைப் பெயர்கள் சிலவற்றை காண்போம். பொதுவாக இன்று, நாம் எல்லா இளம் விலங்கினை "குட்டி" என கூறும் வழக்கம் சரியா ? பின் எதுசரி?

புல்லுண்டு தாவியோடும் விலங்கினங்களான, ஆடு, குதிரை, மான் போன்றவையின் இளம் பருவத்தினை "மறி" என அழைக்க வேண்டும். ஆக, ஆட்டுக் குட்டி அன்று ஆட்டு மறியே சரி!
 
இதுபோல், கழுதைக் குட்டி, யானைக் குட்டி என்பது சரியல்ல, கழுதைக் கன்று, யானைக் கன்று எனக் கூறுவதே சரி! 

இப்படி, கன்றா குட்டியா என்ற சிந்தனை ஒரு புறம் இறுக்க, நாம் "கன்றுக் குட்டியின்னு" ஒன்று வைத்துள்ளோமே? அடடா"!" அது சரியன்று.
 
மேலும், மனிதர்களுக்கு குழவி (Infant) என அழைப்பது சரி! இதன்படி, பிறந்த குழந்தையை பேணும் மருத்துவப் பிரிவினை குழவி இயல் (Neonatology) எனக் கூறலாமா?

  

Tuesday, March 11, 2014

009. நின் கடுஞ்சூல் மகளே - சூலியல்


புன் கண் யானையொடு புலி வழங்கு அத்தம்
நயந்த காதலற் புணர்ந்து சென்றனளே
நெடும் சுவர் நல் இல் மருண்ட
இடும்பை உறவி நின் கடுஞ்சூல் மகளே.

[ஐங்குறுநூறு 386, ஓதலாந்தையார், பாலைத் திணை]

வேனில் திங்கள் வெஞ்சுரம் இறந்து
செலவு அயர்ந்தனையால் நீயே நன்று
நின் நயந்து உறைவி கடுஞ்சூல் சிறுவன்
முறுவல் காண்டலின் இனிதோ
இறு வரை நாட நீ இறந்து செய் பொருளே.

[ஐங்குறுநூறு 309, ஓதலாந்தையார், பாலைத் திணை ]


மேற்க்கண்ட இரு  ஐங்குறுநூற்று படல்களில் காணப்படும் கடுஞ்சூல் மகளே, கடுஞ்சூல் சிறுவன் என்ற அசைகள், கடுமையான சூலிலே (கர்ப்பத்திலே) பிறந்த மக்கள் என்று பொருள் தருகின்றன. அதாவது, சூலிலே முதல் சூல் கடுமையானது. ஆக, இம் மருத்துவப்  பண்பினை நன்கு உணர்ந்த ஓதலாந்தையார்  தலை மகளை "கடுஞ்சுல் மகளே" எனவும் தலை மகனை "கடுஞ்சுல் சிறுவன்" எனவும் தன்னுடைய பாலைத் 
திணை பாடல்களில் குறிப்பிடுகிறார்.

இன்று, சூலியல் (Obstetrics) மருத்துவத்தில், கடுஞ்சுலின் (Primiparvous) பண்புகள் பலவினை நாம் அறிவோம். அதில் ஒன்று கருவறை வாயிலின் (Cervix Uteri)  இளகுத் தன்மை [மேற்கோள்: ]. கடுஞ்சூலில், இந்த இளகுத் தன்மை குறைவாக இருப்பதினால், குழந்தை ஈனும் தருணத்தில் தாய்க்கு குடுதலான சிரமங்கள் ஏற்படுகின்றன. இதுபோக, கருவறை வாயில் உரிய காலத்துக்குளேயே  (37 வாரங்களுக்குள்) இளகினால், குறைச்சூல் (Preterm Pregnency) பிறப்பிற்க்கு வழிவகுக்கும். உலகெங்கும் பல்லாயிரகக் கணக்கான குழந்தைகள் குறைச்சூலில் பாதிக்கபடுகின்றன. அதனால், கருவறை வாயிலின் இளகுத் தன்மையை முன்கூட்டியே அறிந்துக்கொள்ள
இராமன் விளைவு (Raman Effect) போன்ற அடிப்படை அறிவியல் நுட்பங்களோடு, பல புதிய ஆய்வுகளும் தொடங்கியுள்ளன [மேற்கோள்: ].
இம்முயற்சிகள் மூலம் குறைச்சூல் பாதிப்பினை தவிர்க்க இயலும்.   


சரி, மற்றொரு அகநானூறு பாடலை பார்ப்போம். இது, நல்லாவூர் கிழாரின் மருதத் திணை பாடல்.

                                                                    " ... ... ...

புதல்வற் பயந்த திதலை! அவ் வயிற்று
வால் இழை மகளிர் நால்வர் கூடிக்,
‘கற்பினின் வழாஅ, நற் பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆக   
... ... ... ".

[அகநானூறு 86 , நல்லாவூர் கிழார், மருதம் திணை ]


இப்பாடலில், "புதல்வற் பயந்த திதலை" என்பது வயிற்றின் மேற்ப் பகுதியில் சூல் காலத்தில் ஏற்ப்படும் ஒரு வகைத் தழும்பு (Striae Gravidarum) [மேற்கோள்: ]. இதனை சூல் திதலை  எனக் கூறலாம்.

இப்பாடலில், திருமணப் பெண்ணிடம், ஒளிர்மிகு நகை அணிந்த நால்வர் கூடித் தம்போல் கற்பினில் வாழ வழி கூறுவதுப் போல் புலவர் இயற்றியுள்ளார். அந் நாவரும் கற்பினில் வாழ்ந்து புதல்வர்களை ஈன்றவர்கள் என்ற தகுதிக்கு சூல் திதலையைச்  சான்றாக சிறப்பூட்டுகிறார். அப்படியொரு வழக்கமும் அக்காலத்தில் இருந்திருக்கலாம். ஆக, செல்வச்சிறப்பாக 'வால் இழை', கற்ப்பொழுக்கத்தில் வாழ்ந்து புதல்வர் ஈன்றமைக்கு மருத்துவச் சான்றாக 'சூல் திதலை' என அத்துனை சிறப்புகளையும் ஈரடியில் கூறுகிறார் நல்லாவூர் கிழார்.

பைந்தமிழ் இலக்கியங்கள் அனைத்துத் துறையினர்க்கும்  பற்பலக் கோணங்களை வாரி வழங்கும் தன்மையுடையுது. குறிப்பாக, அவற்றுள் செறிந்துள்ள அறிவியல் மருத்துவக் கோணங்கள் பண்டைய தமிழினம் ஒரு அறிவார்ந்தக் கூட்டம் என்று தெள் ஒலி தெரிக்க பறைசாற்றுகின்றன என்றால் அது மிகையாகது.


[கூடுதல் சூலியல் இலக்கியத் தொடர்புகள்: புளிங்காய் வேட்கைத்து - மசக்கை]



மேற்கோள்
. Beyond cervical length: emerging technologies for assessing the pregnant cervix. Feltovich H et. al. Am J Obstet Gynecol. 2012 Nov;207(5):345-54

Common Skin Conditions During Pregnancy. Tunzi M et. al. Am Fam Physician. 2007 Jan 15;75(2):211-8.

Friday, February 28, 2014

008. இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே


யாயே, கண்ணினும் கடுங் காதலளே
எந்தையும், நிலன் உரப் பொறாஅன்; ‘சீறுடி சிவப்ப,
எவன், இல! குறு மகள்! இயங்குதி! என்னும்;’
யாமே, பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின்,
இரு தலைப் புள்ளின் ஓர் உயிரம்மே;
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்தொறும்
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெருஞ்சினை
விழுக்கோட் பலவின் பழுப்பயம் கொண்மார்,
குறவர் ஊன்றிய குரம்பை புதைய,
வேங்கை தாஅய தேம்பாய் தோற்றம்
புலி செத்து, வெரீஇய புகர் முக வேழம்,
மழை படு சிலம்பில் கழை படப் பெயரும்
நல் வரை நாட! நீ வரின்,
மெல்லியல் ஓரும் தான் வாழலளே.

[அகநானூறு 12, கபிலர், குறிஞ்சி திணை]

மேற்கண்ட அகநானூற்று பாடலில் 2000 ஆண்டுகளுக்கு முன் இரு தலைப் பறவையை பிரியா துவரா நட்பிற்கு உவமையாக கபிலர் குறிப்பிடுகிறார் .
ஒத்த இரட்டையர்கள்  (Indentical Twins) ஒரே கருவில் தோன்றி தொடக்கத்திலேயே முழுமையாக பிரிந்து வளர்ந்து பிறப்பர். ஆனால், ஒட்டிய இரட்டையர்கள் (Conjoined Twins) ஒரே கருவில் தோன்றி இடையில் முழுமையாக பிரியாமல் ஒட்டியே பிறப்பர்.
இயல்பாக, ஒரு கருவணுவில் (Zygote) இருந்து கருக்குமிழ் (Blastocyst)  உருவாகி அதன் மேற்பகுதியான  கருவுறை (Chorion) தோன்றி, கருவறை (Uterus) மேல் பகுதில் இணைந்து வளரும். ஒத்த இரட்டைப் பிறப்பானது, ஒரு கருவானாலும் தொடக்கத்திலே  முழுமையாக பிளவுற்று தனி தனி கருவுறையில் கருவறையின் வெவ்வேறு பகுதியில் இணைந்து சூல் முதிர வளரும்.
       
மாறாக, ஒட்டுப் பிறப்பானது ஒரு கருவானாலும் சரிவர பிளவுறாமலோ (பிளவுக் கோட்பாடு), அல்லது பிளவுற்று பின் ஒட்டியோ (ஒட்டுக் கோட்பாடு), ஒரே கருவுறையில் வளரும். தலையொட்டு (Craniopagus), மார்பொட்டு (Thoracopagus), மேல்வயிரோட்டு (Xiphopagus ),அடிவயிரொட்டு (Omphalopagus), இடுப்பொட்டு (Ischiopagus), பின்இடுப்பொட்டு (Pyopagus) என  ஒட்டிப் பிறக்கும் பிறப்புக்களை ஒட்டி இருக்கும் உறுப்பினை கொண்டு பாகுபடுத்தலாம் [மேற்கோள்: ].

மேற்கண்ட அகநானூற்று பாடலில் குறிப்பிட்ட ஒட்டுப்பிறப்பானது இரு தலை ஓர் உயிர் (கவையோட்டு/பக்கஒட்டு) (Dicephalic parapagus) வகையை சேர்ந்தது [மேற்கோள்: ]. இருப்பினும், இவ்வகை ஒட்டுப்பிறப்பின் காரணிகள் இதுவென சரிவர இன்னும் விளங்கவில்லை.    இதைத் தாண்டி, விலங்கினம் இடையேயும்  இவ்வகை ஒட்டுப்பிறப்புகளும் காணப்படுகிறது.

கபிலரின் உவமையை உற்று நோக்குகையில், பிரிக்க இயலாதன்மை பொருந்திய பிறப்பாகவும், ஆக, அது தனிமை இல்லா நிலைமையை  பெற்றுள்ளது. அது போக, ஒட்டியே இருப்பினும் துவரா சிறப்பும் பெற்று அறிவியல், உளவியல் கூறுகளை ஏந்தியுள்ளது.   

தமிழ் இலக்கியங்கள் வெறும் காதலும் வீரமும் ததும்பும் காவியங்கள் மட்டும் அல்ல, அவை பல அறிவியல் கூறுகள் செறிந்த படைப்புகள் என்பதை உணர உணர்த்த வேண்டும்.




மேற்கோள்
. Echocardiographic assessment of conjoined twins Andrews RE , et. al . Heart. 2006 March; 92(3): 382–387.



Tuesday, January 14, 2014

எதுசரி அதுசரி - பகுதி 1: தண்ணீர் வெந்நீர்

 
 
பேச்சு வழக்கில் நழுவும் போக்கை தழுவும் முயற்சி இந்த "எதுசரி அதுசரி" பகுதி. தொடக்க நிலையிலேயே நழுவாமல் தழுவிக்கொண்டால் இலக்கணத்தில் பெருகும் வழுவமைதியின் தொகையை குறைத்துக் கொள்ளலாம்.  
 
முதலில்,  தண்ணீர் சிக்கலுக்கு வருவோம். உரையாடலில், "சுடுத்  தண்ணீர்",  "குளிர்ந்த தண்ணிர்" என்ற சொற்றொடர்களின் பயன்பாட்டினை நாம் பேச்சு வழக்கில் பலமுறை கேட்டிருப்போம். அதுசரிய?
 
"தண்" என்றலே குளிர்ச்சி என்று பொருள். ஆக, சுடுத் தண்ணீர் என்று கூறினால்,அது சூடான குளிர்ந்த நீர் என்று எதிர்மறையாக பொருள்படும். 
எதுசரி? நீரின் வெப்ப நிலைகளை குறிப்பிடுகையில், சூடாக வெந்நீர் என்றும், குளிர்ச்சியாக தண்ணீர் என்றும், பதமாக பதநீர் என்றும் பயன் படுத்தலாமே!

           
 

Monday, January 6, 2014

007. புளிங்காய் வேட்கைத்து - மசக்கை


"நீர் உறை கோழி நீலச் சேவல்
கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர
புளிங்காய் வேட்கைத்து அன்று நின்
மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே".

[ஐங்குறுநூறு 51, ஓரம்போகியார், மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது]


மசக்கை வேட்கை (pica) என்பது சூல் (கர்ப்பம்) தரித்த சில மகளிர்கள், இயல்பற்ற உணவோ பொருட்களோ உண்ணுவது. மேற்கண்ட ஐங்குறுநூறு மருதத் திணை பாடலில், நோய்யுற்று (அல்ல சூல் தரித்து) புளிங்காய் வேட்கை கொள்ளும் நிகழ்வை வெகு சிறப்பாக ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓரம்போகியார் எடுத்துரைத்துள்ளார். 

மசக்கை வேட்கையின் வாழ்வியல் நிகழ்வுகளின் தமிழ் இலக்கியப் பதிப்புகள் நம் வரலாற்றில் முந்தி இருந்தாலும், இதன் காரணிகள் இன்றும் சரிவர புரிந்துக்கொள்ளப்படவில்லை. 

இயல்பற்ற உணவோ பொருட்களோ உண்ண ஏற்படும் வேட்கையின் (craving) காரணிகள் எல்லா வகை மக்கள்களுக்கும் போதுவானவை என்றால்லும், உட்க்கொள்ளும் உணவோ பொருட்களோ ஏனையப்  பண்பாட்டை தழுவியே காணபடுகிறது. இவ்வாறு, புளியங்காய், மாங்காய் உண்ணுவது தமிழ் பண்பாட்டைச்  சார்ந்தது. தமிழ் இலக்கிய வரலாற்றில் இவ்வகை நிகழ்வுகளை விவரித்திருந்தாலும், இதற்கென்று புளி உண்ணல் -puliphagia, மாங்காய் உண்ணல் -mangophagia என தனிப் பெயரிட்டு தற்கால உளவியலில், மருத்துவத்தில் இன்றுவரை விளக்கப்படவில்லை.

இருப்பினும், மசக்கை வேட்கையின் காரணிகளைபற்றிய ஒரு சில கணிப்புகள் தற்கால மருத்துவத்தில் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று நுண் ஊட்டச்சத்து (தாதுச் சத்து / micronutrients) பற்றார்குறை (மேற்கோள்: க). கர்பிணி பெண்களைத்தாண்டி, இதுபோன்ற வேட்கை குழந்தை பருவத்தில்லும் (மண் உண்ணல் / Geophagy), ஒரு சில மன அழுத்தம் பெற்ற பெண்கள் இடையேயும் காணபடுகிறது. 

பள்ளி, கல்லூரிப் பாடத்திட்டத்தில் தமிழ் இலக்கிய பாடங்கள் பெரும்பாலும் வாழ்க்கை நெறிகள், கலை, காதல், வீரம், பண்பாடு போன்ற வாழ்வியல் அங்கங்களை கொண்டுள்ளது. இதைத் தாண்டி அறிவியல் அங்கங்களையும் பொதுத் தமிழ் பாடத்திட்டத்தில் செர்த்துக்கொள்வது சாலச் சிறந்தது.


மேற்கோள்
. Toward a comprehensive approach to the collection and analysis of pica substances, with emphasis on geophagic materials. Young SL, et. al. PLoS One. 2008 Sep 5;3(9):e3147



Friday, September 13, 2013

006. மனநலம் மன்னுயிர்க் காக்கம்




தூய மனநலத்தின் சிறப்புகளை வள்ளுவ பெருந்தகை (Thiruvalluvar) 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தம்முடைய சிந்தனைகளாக நமக்கு அளித்துள்ளார். மேலே, குறிப்பிட்ட இரு குரள்களும் அதற்க்கு சான்றாக எடுத்துக் கொள்ளலாம். மனநலம் பொறுத்து ஏனைய வளங்கள் அமையும் எனவும், அச்சிறந்த மனநலத்தை நல்லதோர் சமூகம் பேணும் எனவும், அடிப்படை உளவியல் சிந்தனைகளை இவ்வாறு விவரித்துள்ளாரா என்று நாம் சிந்திக்கவேண்டும். சரி, இதற்கும் மேலே ஆழமான உளவியல் சிந்தனைகள் திருக்குறளில் உள்ளனவா என்று சற்று தேடலாம்.

பிறப்பு, இறப்பு, உணவு, நோய், மருந்து ஆகிய பல வாழ்வியல் அங்கங்களை ஆராய்ந்து, தமது சிந்தனைகளை தொகுத்தளித்த திருவள்ளுவர், உளவியல் நிகழ்வுகளையும் தெள்ள தெளிவாக தம் பாடல்களில் பதித்துள்ளார் என்றால் அது மிகையாகத்து. இந்நிகழ்வுகள்ளுக்கு அவர் இன்னதென்று தனி பெயர் சூட்டவில்லையே தவிர, சில உளவியல் நிகழ்வுகளை இடுக்கணழியாமை என்ற அதிகாரம் வழியாக நமக்கு தொகுத்துள்ளார் என்றே கூறலாம்.  இதுபோன்ற பல அரிய பைந்தமிழ் அறிவியல் மற்றும் மருத்துவ சிந்தனைகளை முறிவின்றி தொடர்ந்து மேம்படுத்தும் செயற்கரிய செயலை செய்யாமலே போனோம்.


"இடுக்கண் வருங்கால் நகுக அதனை

'இடுக்கண் வருங்கால் நகுக' என்று துன்பத்தை எதிர்கொள்ளும் ஒரு அணுகுமுறையை வெகு நேர்த்தியாக கூறியுள்ளார். இக்கால உளவியலில் [Psychology] விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான நகைப்பாக (அதாவது, துன்பம் நேர்கையில் நகுதல்) [Humor, Level 4 Mature Defense Mechanisms] இருக்குமோ என்று செந்தமிழ் கூறும் நல்லுலகமும், உளவியல் ஆய்வாளர்களும் சேர்ந்துதான் கூறவேண்டும். உளவியல் நிகழ்வுகளை உற்று கவனித்து, நினைந்து, ஆராயாமல் இவ்வளவு தெளிவாக ஒருவரால் கூற இயலாது. ஆக, அச்சிறப்புகள் யாவும் வள்ளுவ பெருந்தகைக்கேச் சாரும்.



இன்னாமையை இன்பம் என எற்றுக் கொள்பவர்களை, அவர்களுடைய பகைவரும் சிறப்புடன் போற்றுவர் என்று நல்லறிஞ்சர்கள் விளக்கியுள்ளனர். இன்னாமையை இன்பம் என எப்படி எற்றுக் கொள்ள மூடியும்? அப்படி அக்காலத்தில் எற்றுக் கொண்டார்களா? இக்குறள் வழி சிந்தனையும், தற்கால உளவியலில் விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான உயர்மடைமாற்றத்துக்கு (அதாவது, தான் உற்ற இடையூறை நேர்மறையாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் மாற்றிக்கொள்தல்) [Sublimation, Mature Defense Mechanisms] இணையான சிந்தனை என தோன்றுகிறது. இக்குறளில் உள்ள 'ஒன்னார் விழையுஞ் சிறப்பு' என்ற சீர்களின் பொருள், [அதாவது, பகையும் (உள்ளிட்ட அனைத்து சமூகமும்) சிறப்பிக்கும் வகை] உயர்மடைமாற்றத்துக்கு இணையாக நிலை நிறுத்துகிறது. இவ்வாறு, நேர்மறையாக மாற்றிக்கொள்வதால், இன்னாமையை இன்பம் என ஏற்றுக்கொள்ள இயலும். எடுத்துக் காட்டாக, தாகத்திற்கு தவறி தம்பியை இழந்த  தமையன் ஊரெங்கும் தண்ணீர் பந்தல் நிறுவும் செயல்.      



துன்பத்திற்கு ஆட்கொள்ளாதவர்கள் துன்பத்திர்க்கே துன்பம் விழைவிர்பார்கள் என கூறுகிறார். அனால், இக்குறளில் தோன்றும் 'இடும்பைக்கு  இடும்பை படாஅ தவர் ' என்ற சீர்கள் ஆய்வுக்குறியது என்பது தனிப்பட்ட கருத்து. இது தற்கால உளவியலில் விளக்கப்படும் பாதுகாப்புப் பொறிமுறைகளில் ஒன்றான ஒட்டா நிலைக்கு (அதாவது, உற்ற இடையூறும் அதை சார்ந்த உணர்வும் ஒட்டாதிருத்தல்) [Isolation of Affect, Anxiety Defense Mechanisms] இணையான சிந்தனையா என்று உளவியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து கூறினால் சிறப்பு. 


மேலும், மனநிலை கெட உடல் நோகும் என்ற கருத்தும் தமிழர்களுக்கு புதிதல்ல. பைந்தமிழ் இலக்கியங்களில் தொடர்ந்து விவரிக்கபட்டும் ஒரு வகையான மனம் பொருந்திய உடல் மாற்றம், பசலை (பசப்பு). இதுபோக, பசப்புறுபருவரல் என்றொரு தனி அதிகாரத்தையே வள்ளுவ பெருந்தகை நமக்காக படைத்துள்ளார்.




எப்படி காதலனை பிரிவதினால் வரும் மனமாற்றத்தின் விளைவு மேனியில் பசலையோ, அது போல துன்பம் விழைவிக்கும் மனமாற்றத்தின் இலக்கமும் உடலா என நாம் எண்ணலாமா? அப்படி என்றால் மனநிலை மாற்றம் எவ்வாறு உடலுக்கு கேடு விளைவிக்கும் என்ற சிந்தனையின் அடிப்படையில் அண்மையில் உருவெடுத்தது தான் உளஉடல் மருத்துவம் [Psychosomatic Medicine]. இப் புதிய மருத்துவ பிரிவின் கீழ், சமூக மற்றும் உளவியல் காரணிகள் எவ்வித தாக்கங்களை உடல் நலத்தில் உருவாகுகின்றன என்பதை ஆராயவும், ஆயிந்து அதன் வழியே அதற்க்குரிய மருத்துவ முறைகளை கண்டறிவதுதான்.

உளவியல் நிகழ்வுகள், முளையில் ஏற்ப்படும் வேதியல் மாற்றங்களை தழுவியே நிகழும் என்பது இன்றைய பொது கருத்து. நரம்பணுவியல் [Neuroscience] தற்பொழுது படிப்படியாக முன்னேற்றம் அடைந்திருந்தாலும், மனித மூளையின் இயக்கங்கள் குறித்து முழுமையாக இன்னமும் நாம் அறியவேண்டியது பல உள்ளன. இவ்வாண்டு (2013), மனித மூளையின் இயக்கங்களை புத்தம் புதிய நரம்பணுவியல் தொழில்நுட்பங்களை கொண்டு  துள்ளியமாகா அறிந்துக்கொள்ள தொடங்கப்பட்ட ஒரு கூட்டு முயற்ச்சியானது மூளை இயக்கங்கள் திட்டம் [BRAIN initiative aka. Brain Activity Map Project] (மேற்கோள்: க). குறிப்பிடும் வகையில், இது வரை இல்லாத பெரிய அளவிற்கு இம் முயற்ச்சிகள் உந்தப்பட்டுள்ளது.

இன்றைய நரம்பணுவியல், எவ்வாறு தனிப்பட்ட நரம்பணுக்கள் மூளையில் செய்திகளை உள்வாங்கி மருமொழிகின்றன என்ற அளவே கூறுகின்றது. ஆனால், இத் திட்டத்தின் மூலம், முதல் முறையாக மூளையில் உள்ள தனிப்பட்ட நரம்பணுகளின் இயக்கங்கள் விளைவாக ஏற்படும் கருத்து உருவாக்கம் (thought process) நுணுக்கங்களையும் நேரடியாக கண்டு புரிந்துக்கொள்ள இயலும் என எதிர்ப்பார்க்க படுகிறது. கருத்து உருவாக்கம் நுணுக்கங்கள் அறிந்தால், அது மனித வாழ்விர்க்கே அச்சாணியாக விளங்கும் மனம் என்னும் உட்ப்பொருளை காணும் அரிய வழி.  ஆக, உளவியலிலும், நரம்பியலிலும் நிரவியுள்ள பற்பல புதிர்களுக்கு இத் திட்டம் பொருள் விளக்கும் என நம்பப்படுகிறது.  



மேற்கோள்
. Research priorities. The NIH BRAIN Initiative.  Insel TR, Landis SC, Collins FS.  Science. 2013 May 10;340(6133): 687-8





Sunday, August 4, 2013

005. மரபணுத்தொகை - நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே

   
"ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே; 
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே; 
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே; 
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே; 
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே; 
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே; 
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே"


தொல்காப்பியம் தமிழில் தலையான முதல் நூல். இப்பெரு நூல், தமிழ் மொழியின் ஆளுமையும், தமிழர்களின் பண்பாட்டு சிறப்பினையும் தெளிவாக விவரித்துள்ளதை பெரும்பாலும் நாம் அறிவோம். இதுபோக, தொல்காப்பியம் உயிரின வாழ்வியலையும் (physiology) அதன் அடிபடையில் அமைந்த உயிரின வகைபாட்டியலின் (taxonomy) தொடக்கத்தை மிகச் சிறப்பாக விவரித்துள்ளது. 

தோலும் தொட்டு அறிவும் (touch sense),  நாக்கும் சுவையறிவும் (gustation), மூக்கும் நுகரறிவும் (olfaction), கண்ணும் பார்வையம் (vision), செவியும் கேள்வியும் (audition) அடங்கிய ஐம்புல அறிவோடு, ஆறாம் அறிவான மனதையும் (mind) உயிரின வாழ்வியலின் அடிப்படை என்று உயிரினங்களை நேரடியாக ஆயிந்து நெறிப்படுத்தியுள்ளதை, 2000 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கண்ட தொல்காப்பிய பாடல் 27 பதித்துள்ளது. இப்பாடலை தொடர்ந்து வரும் பாடல்களில் எவ்வகை உயிரினங்கள் எப்படி வகைபடுத்தலாம் என்ற தொடக்கநிலை சிந்தனைகளை தொல்காப்பியம் பதித்துள்ளது. இச் சிந்தனைகளை, மெய்பிக்கவும், மேம்படுத்தவும் தொடர்ந்து செய்துவந்திருந்தால், இன்று தமிழ் அறிவியலும், மருத்துவமும் இவ்வுலகில் தலைச்சிறந்து வளர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பண்டைய தமிழ் இலக்கிய பதிப்புகள் இத்தகைய சிந்தனைகளை பெற்றிருந்தாலும், இடைகால இலக்கியங்களில் எவ்வித அறிவியல் சிந்தனைகளை பதித்துள்ளது என்ற ஆர்வமும் இன்று நமக்கு பெருகியுள்ளது. 

ஒவ்வொரு உயிரினத்தின் உருவ அமைப்பும் பண்புகளும் அதன் மரபணுத்தொகையை தழுவியே அமைகின்றன. மேலும், உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி மரபணுத்தொகையில் ஏற்ப்படும் மாற்றங்களை பொறுத்தே அமைகின்றன. இக்கட்டுரையில் மரபியல் அறிவியல் ஆய்வில் இன்றைய பெரிய கண்டிபிடிப்புகள் யாவை என காண்போம். நாம் நாமாக இயங்க, மெய்யிரக் கணக்கான உயிரணுக்கள் (cells) ஒருங்கினைந்து இயங்க வேண்டும். இவ்வுயிரணுக்களை இயக்குவது, நம் மரபணுத்தொகையே (genome). இம் மரபணுத்தொகை, எத்தகைய தன்மைகளை கொண்டுள்ளது, என்ற ஆர்வமும் ஆய்வுகளும் வெகு காலமாக தொடர்ந்து பெருகியுள்ளது.

முதல் படியாக, 1950களில்,  மரபிழை மூலக்கூறின் பரிமாணங்களை (DNA structure) அறிய ஆய்வுகள் தொடர்ந்தன. 1953இல், வெற்றிகரமாக வாட்சன் (Watson) மற்றும் கிரிக்கு (Crick) என்ற மரபியல் விஞ்ஞாணிகள்  மரபிழை மூலக்கூற்றின் பரிமாணங்களை தம் ஆய்வின் முடிவுகளை கொண்டு விவரித்தனர்.

இரண்டாம் படியாக, 1990களில், பன்னாட்டு கூட்டு முயற்ச்சியாக மனித மரபணுத்தொகையில் உள்ள மரபணுக்களின் எண்ணிக்கையும் அவை அடைங்கிய மொத்த சொற்றொடர்களையும் (DNA Sequence) மரபியல் விஞ்ஞாணிகள் ஆயிந்து ஆராயிந்தனர் (Human Genome Project).

மனித மரபணுத்தொகையானது, ஏறத்தாழ 3 தொள்ளுண் [௲௲௲] (3x109 அல்ல 3 billion) அடிப்படை மூலக்கூறுகளை (nucleotides) கொண்ட நெடுந்தொடராக கூறப்படுகிறது. இதில், மொத்தம் 20,000–25,000 மரபணுக்கள் (genes) உள்ளதாக முடிவுகளை அறிவித்துள்ளனர். ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால் இத்தனை மரபணுக்களும் வெரும் இரண்டு விழுக்காடு (2%) தான். மீதியுள்ள 98% மரபணுத்தொகை பயனெற்ற மரபிழையாக (Junk DNA) தான் வெகு காலமாக ஒதுக்கி வைத்தனர்.

ஆனால், மூன்றாம் படியாக, அண்மையில் மேற்கொண்ட பெரிதோர் பன்னாட்டு கூட்டு முயற்ச்சியில், மனித மரபணுத்தொகையில், 80%, செயல்பாட்டில் தனிச்சிறப்புகளை கொண்டது என்று ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர் [ENCODE Project - மரபிழை அங்கங்களின் தகவற்களஞ்சியம்] (மேற்கோள்: க). இம்மரபிழை தொடர்கள், மேற்க்கண்ட மொத்த மரபணுக்களின் வெவேறு கட்டுபாட்டு தளங்களாக விவரிக்க பட்டுள்ளன.  சரி, இப்புதிய கண்டுபிடிப்பின் தாக்கம் என்ன? மரபணுகளின் நேரடி பாதிப்பால் விளையும் சீர்கேடுகள் போக, மரபணுகளின் கட்டுபாட்டு தளங்களில், அதாவது ஒரு படிமேல், ஏற்படும் பாதிப்பும் உடல் சீர்கேடுகளை விளைவிக்கும் என்பதுதான். இவ்வுயர்நிலை மரபியல் கண்டுபிடிப்பு, மருத்துவ அறிவை கற்பனைக்கு எட்டா அளவிற்கு விரிவடைய செய்துள்ளது. 
 

மேற்கோள்
. An integrated encyclopedia of DNA elements in the human genome. ENCODE Project Consortium, Bernstein BE, Birney E, Dunham I, Green ED, Gunter C, Snyder M.  Nature. 2012 Sep 6;489(7414):57-74.





Sunday, January 13, 2013

004. பெருமூதாளரோம்


" ..................................    கல்லா இளமை!
அளிதோ தானே! யாண்டுண்டு கொல்லோ,
தொடித்தலை விழுத்தண்டு ஊன்றி நடுக்குற்று
இருமிடை மிடைந்த சிலசொல்
பெரு மூதாளரோம் ஆகிய எமக்கே?"


கல்லா இளமை தானே இழந்ததை இனி நினைந்தென்ன பயன் என வருந்தி, தடி ஊன்றி நடுக்குற்று, இருமல் இடையிடையே வந்து சிலசொல் பேச பெருமூதாளராய் ஆகின்றோம் என்று 3000 ஆண்டுகளுக்கு முன்னே, இளமை நீங்கி முதுமையடையும் வாழ்வியலை புற நானூற்று பாடலொன்று வெகுசிறப்பாக எடுத்துரைக்கிறது. 

முதிர்வும் எதிர்முதிர்வும் 
மரபணுத்தொகை (Genome) ஒவ்வொரு கட்டத்திலும் வெகுசிறப்பாக கட்டளையிட, ஒரு கருவணுவில் இருந்து வளர்ந்து நாம் பிறந்து ஆளாகின்றோம். இதற்க்கான மரபணு ஆய்வுகள் நிறையவே உள்ளது. சான்றாக, பல பிறவிக் குறைபாடுகள் (congetital disorders) மரபனுத்தொகைச் சார்ந்து இருப்பதை மரபியல் ஆய்வாளர்கள் விவரித்துள்ளனர். அதேபோல் முதிர்வடையவும் (aging), மரபணுக்கள் துணையாக இருக்குமோ? அப்படி இருப்பினும், இம் மரபணுக்களை கொண்டு முதிர்வடைவதை நம்மால் தடை செய்யலாகுமோ அல்ல தாமதிக்க தான் இயலுமோ? இவை அனைத்தும் சிறப்பான வினாக்கள்! 

மூதாளர் மருத்துவம் (Geriatric medicine) என்பது பெருவாரியாக 65 வையதுக்கு மேற்பட்ட மூதாளர்களின் பொது உடல் நல மருத்துவம் ஆனது. இம் மருத்துவமும் அதன் மருத்துவ ஆய்வுகளும் வளர நூற்மூதாளர்களின் (centenarians) எண்ணிக்கை நான்கு மடங்காக பெருகியுள்ளதாக இங்கிலாந்தை சார்ந்த அளவையோன்று கூறுகின்றது.

மூதாளர் மருத்துவ பிரிவின் பல மருத்துவ ஆய்வுகளில் ஒரு கிளையாக எதிர்முதிர்வு (anti-aging) ஆய்வினை கருதலாம். இவ்வாய்வின் வெளியீடாக பல எதிர்முதிர்வு வழி வகைகள் பிறந்துள்ளன. உணவு (diet) மற்றும் உயிர்ச்சத்து (vitamins) வழிகள், வளரூக்கி (hormones) வழிகள், அதுபோக புதிய மரபியல் வழிகளையும் கண்டறிந்துள்ளனர்.

வெகு நாள் உயிர் வாழும் விலங்கின மரபணுத்தொகையோ, நூற்மூதாளர்களின் வாழ்வியலோ ஆராய பல கோணங்களில் புதிய நெடுவாழ் (longevity) வழிகள் கண்டறியலாம். மற்ற விலங்கினத்துக்கும், மாந்தர்க்கும் உள்ள ஒரு வேற்றுமை யாதெனில், விலங்கினங்களில் வேண்டிய அளவும், வேண்டிய வழிகளில்லும் மரபியல் செயிமுறைகளை செய்துபார்க்கலாம்.

நெடுவாழ் விலங்கான ஒரு வகை கடல் வாழ் குடை நுங்குமீன்  (Jellyfish / Turritopsis nutricula) உயிரினம் முதிர்வுற்று இறவா தன்மை (immortal) பெற்றது. இவை வேண்டுமென்றால் வயதில் பின்நோக்கி செல்லும் தன்மையும் கொண்டவை. இதை மாந்தர் (மனித) வாழ்வியலோடு ஒப்பிட்டால், அகவை அடைந்து  (வயதுக்கு வந்து) பெருமகனாகியும், வியப்பாக மையிளகி உருமாறி பிள்ளை பருவத்திற்கு வயதில் பின் நோக்கி  செல்லுதலுக்கீடு. மற்ற பெருமீனுக்கு இரையாவதை தவிர, இவைகளுக்கு இறப்பில்லை. என்ன ஒரு சிறப்பு இக்குடை நுங்குமீன்னுக்கு!

இதைபோல இறவா தன்மை கொண்டதாக இல்லாவிடினும், கிரீன்லாந்து சுறா (Greedland shark), கடல் ஆமை (Aldabra giant tortoise/Aldabrachelys gigantea), கோயி மீன் (Koi fish /Cyprinus carpio) போன்ற விலங்கினங்களில், ஒரு சில விலங்குகள் 200-400 ஆண்டுகள் வாழும் தன்மையை கொண்டவை. ஆக, இவை நமக்கு கூரும் நல்வழிகள் என்ன? சோர்வூற்றும் வகையில், இவ்வினங்களின் மரபியல் ஆய்வுகள் இன்னமும் தொடக்கநிலையில் தான் உள்ளது. இப்படி ஒரு நிலையிருக்க, நெடுவாழ் வழிகளுக்கு எங்கு திரும்புவது?

மற்றொரு உயிரினம் மரபியல் ஆய்வுக்காக வெகுநேர்த்தியாக தற்பொழுது பயனில் உள்ளது. அது தான் ஒரு வகை நூற்புழு (சிநோராப்டைட்டிசு எலெகான்சு/Caenorhabditis elegans). அளவில் 1 மிமீ நீளமும், பார்ப்பதிற்கு ஒளிகடவ (transparent), ஓரளவு அணைவற்ற (less complex) மரபணுத்தொகையை கொண்டு, பாக்டீரியாவை உணவாக உட்கொள்ளும் ஒரு நூற்புழு இது. முதன் முதலில், சிட்னி பிரனெர் (Sydney Brenner) என்ற தென் ஆப்பிரிக்கா விஞ்ஞானி மரபியல் ஆய்விர்க்காக இந்நூற்புழுவை பயன்படுதினார். இவ்வுயிரினத்தின் மரபியல் ஆய்வுகள் இதுவரை மிகச்சிறந்த கண்டுபிடிப்புகளை நமக்களித்துள்ளது. இதை தழுவி 2002 ஆண்டுக்கான நோபல் விருதினை (Nobel Prize) சிட்னி பிரனெர்க்கும், இவருடன்,  சான் சுளுச்டன் (John Sulston), இராபெர்டு ஆர்விட்சு (Robert Horvitz) ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கும் அதே ஆண்டு நோபல் விருதினை வழங்கினர். பின்னர், இதே உயிரினத்தை மரபணு மூலக்கூரு ஆயிவிர்க்காக, ஆன்றிவு பயர் (Andrew Fire), கிரைகு மெல்லோ (Craig Mello) என்ற விஞ்ஞானிகள் ஆராயிந்து புதியதோர் மரபணு மூலக்கூரு வகையினையே கண்டறிந்தனர். இவர்களுக்கும் 2006 ஆண்டுக்கான நோபல் விருதினை மருத்துவ அல்ல வாழ்வியல் பிரிவிர்க்காக வழங்கினர். அத்தனை சிறப்புகள் பொருந்திய ஒர் உயிரினம் இது. சரி, இந்நூற்புழு நெடுவாழ் வழிகளேனும் நமக்கு காட்டியுள்ளதா?

இந்நூற்புழுவின் (சி.எலெகான்சு / C. elegans) மரபணு திடீர்மாற்ற (Genetic mutations) ஆய்விலிருந்து, ஒரு வியப்பான முடிவு தோன்றியது. இதுவரை மருத்துவ ஆய்வில் புலப்படாத ஒர் உண்மையது. சி.எலெகான்சுவின்  மரபணுத்தொகையில், ஒரு மரபணு, திடீர்மாற்றங்கொள்ள அப்புழு இயல்புக்கு மாறாக 30%-50% காலம் நீட்டி நெடுவாழ் வாழ்ந்தது (மேற்கோள்: க). தற்பொழுது, இந்தியர்களின் சராசரியான வாழுங்காலம் 64.7 ஆண்டுகளாக இருக்க, இச்சிறப்பு செய்தி மருத்துவ அறிவியல் உலகத்தின் கவனத்தை உடன் ஈர்த்துள்ளது.

எந்த மரபணுவின் திடீர்மாற்றத்தினால் அப்புழுவின் வாழுங்காலம் இரட்டிப்பானது என்ற தேடுதலில், daf-2 என்ற மரபணு திடீர்மாற்றங்கொள்ள அப்படி ஒரு வியக்கதக்க முடிவு புலப்பட்டதாக மேற்கண்ட ஆய்வு கூறுகிறது (மேற்கோள்: க). இம் மரபியல் மாற்றத்தை, மாந்தர் வாழ்வியலொடு ஒப்பிட்டால், 90 ஆண்டு வயதிலும், 45 போல் தோற்றத்திலும், செயலிலும் இயங்குவதிற்க்கீடு. காலம் தான் கனியுமே தவிர, அதை தழுவின முதிர்வு உடலுக்கில்லை. ஆகா, எத்தகைய தன்மை இது! இந்த எதிர்பாரா செயிமுறை முடிவு, மேலும் இதை போல கூடுதலான மரபணு திடீர்மாற்றங்கள் வேரேதும் உள்ளதா என்ற தேடுதலுக்கு விஞ்ஞானிகளை உந்தியது. அதே போல், daf-16 என்ற மரபணுவும் நெடுவாழ் தண்மை கொண்டிருக்கும் உண்மையும் புலப்பட்டது (மேற்கோள்: க).

இயல்பில், daf-2, daf-16 மரபணுக்களுக்கு ஒர் அடிப்படை வேருபாடுண்ட்டு. இயல்புக்கு மாறாக daf-2 மரபணு திடீர்மாற்றங்கொள்ள தான் நெடுவாழ் தன்மை பிறக்கிறது. ஆனால், daf-16 இயல்பாகவே இளமையை தக்கவைக்கும் சிறப்பை கொண்ட ஒரு மரபணுவாக உள்ளது.

சி.எலெகான்சுவை தவிர மற்ற உயிரினங்களுக்கும் இந்த மரபணுக்கள் சொந்தமா? பொதுவாக, மரபணுக்களின் சொற்தொடர் (DNA sequence) ஒர் உயிரினத்துக்கும் மற்றொன்றுக்கும் வேறுபடும். அதை தழுவி அதன் இயக்கங்களும் ஏற்ற தாழ்வாக மாறுபடும். இதுவரை மரபியல் ஆய்வில் பரவலாக பயனில் உள்ள, பழ ஈ (fruit fly/Drosophila melanogaster), சுண்டெலி (mice/Mus musculus), ஆகிய உயிரினங்களில், daf-2 மரபணுவின் சொற்தொடர் சற்று வேறுபட்டிருந்தாலும், இதன் மரபணு திடீர்மாற்றங்கள் நெடுவாழ் தன்மையளிக்கிறதாக ஆய்வுகள் கூறுகின்றன. இம் மரபியல் ஆய்வுகளின் அடிப்படையில் சிந்திக்கையில், daf-2 மரபணுவிற்கு ஈடான மாந்தர் எதிருருகள் (variant / allele) குறையுள்ளதாக பெற்றிருந்தால், முதிர்வடைவதால் ஏற்படும் நோயிகளின்றி இளமையுடன் நெடுவாழ் வாழும் வாயிப்பு நமக்கு உயரும். இத்தக மாந்தர் மரபியல் ஆய்வுகள் இன்னும் தொடங்காத நிலையில் இச் சிந்தனை ஒரு கன்னிப்பகவே தற்பொழுது உள்ளது. சோர்வடைய வேண்டாம், இவ்வழி நெடுவாழ் மரபியல் ஆய்வுகள் மேலும் தொடருகின்றன. அதே போல் மாந்தர் நெடுவாழ் மரபியல் ஆய்விற்கான ஏற்பாடுகளும் தொடங்கியுள்ளன. 

 

மேற்கோள்

. Kenyon C, Chang J, Gensch E, et.al. A C. elegans mutant that lives twice as long as wild type. Nature. 1993 Dec 2; 366(6454):461-4.

 

   

Wednesday, November 21, 2012

003. ஆசிய மது ஏற்காநிலை




மதுவின் கேடுகளை எடுத்துரைக்க, கள்ளுண்ணாமை என்று தனியோர் குறள் அதிகாரதையே திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னே நமக்காக படைத்துள்ளார். மது பல சமூக கேடுகளை விளைவித்தாலும், எவ்வகை உடல் நலக்கேடுகளை விளைவிக்கும் என்பதை இங்கு அலசலாம்.

ஆசிய மது ஏற்காநிலை (Asian glow, Asian flush, or Alcohol flush reaction) என்றால் என்ன ?
இது ஒரு வகையான மது சிதைமாற்ற குறைபாடு. இக்குறைபாடினால், மதுவின் சிதைமாற்ற கழிவுகள் (catabolic intermediates) சரியாக வேளியேற்றபடாமால் அவை கொடிய உடல்நல சீற்குளைவுகளை  ஏற்படுத்தும்.  அச்சீற்குளைவுகளில் ஒன்றாக முகவெளிர்ப்போ (புறவெளிர்ப்போ)  சிவக்கவோ வெளிப்படையாக புலப்படும். இவ்வகையான மது ஏற்காநிலை, குறிப்பாக ஆசிய மக்களிடையே வியப்புடன் காணபடுகின்றது. ஏன் இது பெரும்பாலான ஆசிய மக்களில் காணபடுகின்றது என்பதை மேலும் காண்போம்

முதலாக, மது பருகியபின் உடலில் அதன் வேதியல் மாற்றங்களை காண்போம். "அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு" என்பதோர் தமிழ் பழமொழி. அதேபோல், அளவுக்கு மீறி பருகினால் குடிநீரும் ஆழ்மயக்கதுள்ளாக்கும்  (coma), ஏன் உயிரை கூட நீக்கும் (death). உயிர்வாழ தேவையான குடிநீரே இத்தகைய நச்சு தன்மையை (water intoxication) தன்னுள் கொண்டிருக்க, மதி மயக்கும் மதுவோ எத்தகைய தன்மையை கொண்டிருக்கும் என சற்று சிந்திக்க வேண்டும்.  
   
மது அல்லது  "எத்தனால்"  (C2H6O Ethanol) பருகியபின், உடலில் அதன்  சிதைமாற்றம் (catabolism) ஏற்படுகின்றன. அவ்வாறு, சிதைந்து ஆல்டிஃகைடு (C2H4O) [வேதிவினை ஒன்று] ஆகவும் பின் அசிட்டிக் அமிலமாகவும் (CH3COOH) [வேதிவினை இரண்டு], அதன் பின் அஃது அசிடைல் கோ-ஏ (acetyl Co-A) [வேதிவினை மூன்று] என்றொரு இணைக்காரணியாக மாறும். இந்த அசிடைல் கோ-ஏ பின் நீராகவும் (H2O), கரியமிலவளியாக  (carbon dioxide/CO2) இறுதியில் மாறும் [வேதிவினை நான்கு]. சரி, இதில் எவ்வேதிவினை (chemical reaction) மது ஏற்காநிலைக்கு அடிப்படையாக அமைகின்றது என பார்ப்போம்.

 உடலில் இரைப்பை, மூளை போன்ற உறுப்புகளில் மது சிறிதளவு சிதைமாற்றம் நடந்தாலும், பெரும்பாலும் கல்லிரலில் தான் நடைபெறுகின்றன. அவ்வாறு, மதுவின் சிதைமாறுதளுக்கு ஒரு சில நொதிகள் (enzymes) தேவை. உடலில் நொதிகள், மரபணுக்களை தழுவியே உருவாக்கபடுகின்றன. ஆக, இவ்வகை மரபன்னுக்கள் சீராகவோ அல்ல சீர்குளைந்தோ இருப்பின், அதை தழுவி நோதிகளும் அளவில் இயல்பாகவும் அல்லது ஏற்றதாழ்வகவும் காணப்படும்.

மேற்க்கண்ட நான்கு வேதிவினைகளில், முதலாவது செயல்பட ஆல்க்ககால் டிஐதரோச்செனேசு (alcohol dehydrogenase) என்ற நொதி தேவை. இதைபோல், இரண்டாவது வேதிவினை செயல்பட  ஆல்டிகைடு டிஐதரோச்செனேசு (aldehyde dehydrogenase) என்ற நொதி தேவை. இவ்விரண்டு நொதிகளின் செய்பாடு குன்றின், அதை தழுவிய சிதைமாற்றம் சரிவர நடைபெறாமல், மூலமான மதுவும்  (C2H6O Ethanol) அதன் கழிவான ஆல்டிகைடும் இயல்புக்குமாறாக உடலில் தேக்கமடையும்.


ஆசிய மற்றும் இந்திய மரபியல் பின்னணி
மது ஏற்காநிலையின் மரபியல் பின்னணி குறித்து மேலை நாடுகளில் ஆழ்ந்த ஆய்வுகள் இன்றைய நாளில் இருப்பினும், 121 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இத்தகைய ஆய்வுகள் அத்தனை ஆழத்தில் இல்லை. மேற்க்கண்ட நொதிகளின் செயபாட்டில்தான் வேறுபாடுண்டு தவிர இந்நோதிகள் செயல்இழந்து  காணபடுவதில்லை. இந்த செயப்பாட்டு வேற்றுமை, மரபணு திடீர்மாற்றத்தால் (point mutation) கொண்ட ஒருவகை மரபியல் பல்லுருத்தோற்றமே (genetic polymorphism).    

ஆல்க்ககால் டிஐதரோச்செனேசுக்கான மரபணு மனித மரபணுதொகையின் (human genome) 4q நிறப்புரியில் (chromosome) அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆல்க்ககால் டிஐதரோச்செனேசுக்கான மரபணுவின் எதிருரு (allele) ADH1B*1 (ADH1B*47Arg) உருவாக்கும் நொதியானது, ADH1B*2 (ADH1B*47His) எதிருரு உருவாக்கும் நொதியைகாட்டிலும் செயற்பாட்டில் குறைவு (ADH1B*1 < ADH1B*2). இதனால், ADH1B*1 எதிருருவை கொண்டவர்களின் உடலில், ADH1B*2 கொண்டவர்களின் உடலைகாட்டிலும் மது கூடுதலான தேக்கம் ஏற்படும். வட இந்தியாவில் மேற்கொண்ட மரபியல் ஆய்வு ஒன்றில், அப்பகுதி மக்களில் நொதி குறை செயப்பாடிற்க்கான ADH1B*1 எதிருரு, ஒருசாரக அனைவரிடமும் (99.99%) இருப்பது விளங்கியது  (மேற்கோள்: க). இதை சராசரி அல்ல இயல்பென்றும் எடுதுக்கொள்ளலாம்.

அதேபோல், ஆல்டிகைடு டிஐதரோச்செனேசு மரபணு 12q24 நிறப்புரியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் எதிருரு ALDH2*2 (ALDH2*487Lys) உருவாக்கும் நொதியானது, ALDH2*1 (ALDH2*487Glu) எதிருரு உருவாக்கும் நொதியைகாட்டிலும் செயற்பாட்டில்  குறைவு (மேற்கோள்: ) [ALDH2*2 < ALDH2*1]. இதனால், ALDH2*2 எதிருருவை கொண்டவர்களின் உடலில், ALDH2*1 கொண்டவர்களின் உடலைகாட்டிலும் ஆல்டிகைடு கூடுதலான தேக்கம் ஏற்படும். இந்த ஆல்டிகைடின் தேக்கம் உடலில் பலவகையான நச்சுத்தன்மையை வெளிபடுத்துகின்றன. வியப்பாக, நச்சு விளைவிக்கும் எதிருரு ALDH2*2, மேலைநாட்டவர்களில் அரவே காணபடுவதில்லை. இக்கூற்றை நன்றாக உணரவேண்டும். குறிப்பாக, கெளகேசிய இனத்தவர் (Caucasians), ஆப்பிரிக்க இனத்தவர் (Africans), மற்றும் அமெரிக்க இனத்தவர் (Americans) இவர்களில் எதிருரு ALDH2*2 அரவே காணபடுவதில்லை. ஆக, இவர்களுக்கு பாதிப்பில்லை.

மாறாக, கவலைக்குறிய எதிருரு ALDH2*2 இந்திய மக்களில் திடம்பொருந்தி  ஒன்றமைவியமாக (genetic monomorphism) காணபடுகின்றது. வட இந்திய ஆய்வொன்றின்படி இவ்வெதிருரு ஏறத்தாழ இருபது விழுக்காட்டு (20%) மக்களில், அதாவது ஐந்தில் ஒருவருக்கு  காணபடுகிறது. குறிப்பாக, மத்தியப் பிரதேசம் (Madhya Pradesh), மராட்டியம் (Maharashtra), ஆந்திரம் (Andhra Pradesh) ஆகிய மாநிலவாழ் மக்களில் இவ்வெதிருரு ஒருசாரக உள்ளன (மேற்கோள்: ).

மேலும், ஆசிய மக்களில் ஐம்பதிலிருந்து அதிகபட்சமாக எண்பது விழுக்காட்டு (50%-80%) மக்களில் மது ஏற்காநிலை உள்ளதாக ஆய்வொன்று கூறுகின்றது. இருப்பினும் இத்தகைய மரபியல் ஆய்வுகள் பெரிய அளவில் இந்தியாவில் இன்றும் மேற்கொள்ளபடவில்லை.      

ஆக தாக்கம் என்ன ?
ஆல்டிகைடின் தேக்கம் அதன் நச்சு தன்மையை பெருக்கி பப்பல உடல் சீர்குலைவுகளை உண்டாக்கும். ஆக, மதுவை காட்டிலும் ஆல்டிகைடின் தேக்கமே கொடியது. எதிருரு ALDH2*2 கொண்டவர்கள் இந்தியாவில் ஐந்தில் ஒன்றாக இருக்க, பொதுவாக மது அருந்துவதே தீங்கு. அதிலும், அளவில் கூடுதலாகவோ, அடர்த்தியில் மிகுதியாகவோ மது பருகுவது இவர்களுக்கு கொடிய விளைவுகளை ஏற்படுத்தும். 



மேற்கோள்கள்

Vaswani M, Prasad P, Kapur S. Association of ADH1B and ALDH2 gene polymorphisms with alcohol dependence: a pilot study from India. Hum Genomics. 2009 Apr;3(3):213-20.

.  Ohta S, Ohsawa I, Kamino K. et. al., Mitochondrial ALDH2 deficiency as an oxidative stress. Ann N Y Acad Sci. 2004 Apr;1011:36-44.

. Bhaskar, L.V., Thangaraj, K., Osier, M. et. al., Single nucleotide polymorphisms of the ALDH2 gene in six Indian populations. Ann Hum Biol. 2007 Nov-Dec;34(6):607-19.




Wednesday, August 19, 2009

002. இந்திய மருத்துவம்


"உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து (950)."

நோயாளி, மருத்துவர், மருந்து, செவிலி, என நான்கும் மருத்துவத்தின் அங்கங்கள் என்று வள்ளுவ பெருந்தகை 2000 ஆண்டுகளுக்கு முன்பே மருத்துவத்தை விவரித்துள்ளார்.

இக்கால அல்லியல் மருத்துவம் [ அல்லோபதிக் மெடிசின் / Allopathic Medicine (அ) வெஸ்டர்ன் மெடிசின் / Western Medicine ], தற்கால அறிவியல் ஆய்வோடு வளர்ந்திருந்தாலும், இதன் பெரும்பாலான வளர்ச்சி கடந்த 200 ஆண்டுகளே ஆனது.

மேலும், தற்போது புழக்கத்தில் உள்ள மருந்துகள், 100 க்கும் குறைந்த தாய் வேதியல் சேர்மங்களை (மதர் காம்பௌண்ட்ஸ்/mother compounds) கொண்டே உருவாக்கபட்டுள்ளது. உதாரணமாக, பெரும்பான்மையான மூச்செறி மயக்க மருந்துகள் , ஈத்தர் (ether) எனபடும் ஒரு வேதியல் சேர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டவை. அதேபோல, பெரும்பான்மையான கயிச்சல் மருந்துகள் ஒரு வகையான ஆட்ருப்பாளை (வில்லோ த்ரீ / Willow Tree/சலிக்ஸ் டேட்ரஸ்பர்மா /Salix tetrasperma) மர பட்டையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாலிசிலிக் அமிலம் (salicylic acid) என்ற சேர்மத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆஸ்பிரின் (Aspirin) என்னும் ஒரு கயிச்சல் மருந்து பல ஆண்டுகளாக உலகெங்கும் பயன் படுத்தபடுகின்றது. தற்கால மருத்துவத்தில் இன்று புழக்கத்தில் உள்ள பல மருந்துகளின் தாய் சேர்மங்களை நாம் அடையாளம் காணலாம்.

இப்படி, தற்கால மருத்துவத்தின் குறிப்பாக அல்லியல் மருந்துகள் கடந்த 200 ஆண்டுகளுக்குள்ளயே கண்டுபிடிக்கப்பட்டு மேம்படுதபட்டுளது. ஆனால் மரபு மருத்துவ முறைகள் கண்டந்த 2000 ஆண்டுகள் அல்ல அதற்க்குமேலே வழக்கில் உள்ளது. இந்திய மரபு மருத்துவம் சித்த வைத்தியம், ஆயுர்வேத வைத்தியம், யுனானி வைத்தியம், போன்ற மருத்துவ முறைகளை பொதுவாக உள்ளடைக்கியது.

இவ்வகை மரபு மருத்துவ் முறைகளில் இரு முக்கிய அங்ககளை கொண்டுள்ளது. ஒன்று, நோய்நாடல் மற்றொன்று நோயிக்கு தீர்வு கானல்.


"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல் (948)".

நோய் இதுவென அறிந்து அந்நோய்க்கு ஏற்ற தீர்வு காணவேண்டும் என வள்ளுவபேருந்தகை விவரிதுசென்றார். அல்லியல் மருத்துவ முறைகளை ஒப்பிடுகையில், நோய் நாடல் (டையாக்நாச்டிச்ஸ்/diagnostics) துல்லியத்தில் மரபு மருத்துவம் பின்தங்கி இருந்தாலும், நோய் வகைப்பாட்டியியலிலும் (கிலாசிபிகெசண்/classification), நோய் தீர்வியலிலும் (தேரபியுடிக்ஸ்/Therapeutics) பரந்து விரிந்திருக்கும் என்பது ஒர் ஏதிர்ப்பார்ப்பு. சரி, எதன் அடிப்படையில் இப்படி ஒர் எதிர்பார்ப்பு?

திருக்குறள், திருமந்திரம் போன்ற திருநூட்கள் பல வகையான நோய்களுக்கு மருத்துவ முறைகளை விவரிக்கின்றன. இத்திருநூட்களின் பழமையை கருதும்போது நோய் வகைப்பாட்டியலில் இவை செழித்திருக்கும் என்பது என் எதிர்ப்பார்ப்பு. அதேபோல் நோய் தீர்வியலிலும் மரபு மருத்துவம் செழித்திருக்க வாய்ப்புள்ளது.


பாலம் தேவை
தொன்மையை குறித்து மரபு மருத்துவ முறைகளை முற்றிலும் வழக்கில்லிருந்து நீக்குவது சரியா? அல்லது, பழமையனாலும் பயனுள்ளவை என பிரிதெடுத்து அதை மேம்படுத்தி சேர்த்துக்கொள்வது நன்மையா?

மரபு மருத்துவத்தின் தொன்மையை கருதுகையில், இதன் பல்வேறு அங்கங்கள் யாவும் படி படியாக வளர்ந்து பேரும் முதிர்ச்சி அடைந்துருக்கும் என்பதில் ஐயமில்லை. இவ்வளர்ச்சியின் காரணமாக உச்சி முதல் பாதம் வரை, உடல் உறுப்புகளின் பல்வேறு சீர்கேடுகள் வகை படுத்தபட்டுள்ளது. மேலும், நம் முன்னோர்கள் இச் சீர்கேடுகளுக்கும் தீர்வும் கண்டுள்ளனர்.

சரி, மரபு மருதுவதிர்க்கும் தற்கால அல்லியல் மருதுவதிர்க்கும் உள்ள வித்தியாசம் என்ன? இவ்விரு முறைகளுக்கு இடையில் உள்ள பிளவு என்ன? நோய்வகைபாட்டியியலில், மரபு மருத்துவமும் தற்கால  மருத்துவமும் ஒத்தி இருந்தாலும் நோய் தீர்வு  கானலின் அணுகுமுறையில் முற்றிலும் இவை வேறுபடுகின்றன. சுருக்கமாக சொன்னால், ஒரே வினாவிற்கு இருவேறு விடைகள்.

தற்கால அல்லியல் மருத்துவம் இயற்பியல் (ப்ய்சிக்ஸ்/Physics), வேதியியல் (கெமிஸ்த்ரி/Chemistry) போன்ற அறிவியலின் கிலைகளை சார்ந்து கடந்த 200 ஆண்டுகளிலே வளர்த்துள்ளது. இந்த சார்பு நிலமையும் குருகிய காலத்தையும் கருதுகையில், தற்கால மருத்துவத்தின் நோய் தீர்வியல் இன்னும் முழுமை அடையவில்லை என கூரலாம்.

மேலே கண்டதுபோல், தற்கால அல்லியல் மருத்துவத்தின் மருந்துகள் வெகு சில தாய் சேர்மங்களில் இருந்தே உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், பெரும்பாலான இவ்வகை தாய் சேர்மங்களின் பிறப்பு மூலிகையில் தான் உள்ளது.


பேர் வேறென்றாலும் வேர் ஒன்று
இந்திய மரபு மருத்துவத்தில், மூலிகைகள் பெரும்பாலான பங்குவகித்து வந்துள்ளது. "ஆயிரம் வேர்கொண்டவன் அரை வைத்தியன்" என்ற தமிழ் பழமொழி மூலிகையின் அளவையும் பங்கையும் குறிக்கின்றன ஒரு வகையான மேற்கோளாக எடுத்துகொள்ளலாம். இப்படி ஆயிர கணக்கான முலிகைகளை அடையலாம் கண்டு, பற்பல நோய்களுக்கு நம் முன்னோர்கள் தீர்வுகண்டுளனர். மூலிகைகளின் தயர்ப்பு முறைகளில் சித்த, ஆயுர்வேத மற்றும் யுனானி  மருத்துவ முறைகள் வேறுபட்டாலும், இம் முறைகளுக்கு இடையே பெரும்பாலும் பொதுவான மூலிகைகள் காணபடுகின்றன.

ஆக, ஆயிரக் கணக்கான இவ்வகை மூலிகையில் இருந்து, இன்று தற்கால மருத்துவத்திற்காக எத்தனை வகையான தாய் சேர்மங்களை கண்டுபிடிக்கலாம் என்ற உண்மையை நாம் சிந்தனையில் கொள்வோம்.


இந்திய அரசின் பங்கு
இத்தகைய அரிய மருத்துவ முறைகளை போற்றி பேணிகாப்பதில் இந்திய அரசுக்கு பேரும் பங்குள்ளது. சித்த, ஆயுர்வேத, மற்றும் யுனானி மருத்துவ முறைகளை பயில்வதர்கென்று மருத்துவ கல்லூரிகளையும் அதை சார்ந்த மருதுவசாளைகளும் இந்திய அரசு நிறுவியுள்ளது.  இவ்வரிய தொண்டின் காரணமாக,  மரபு மருத்துவம் காலத்தோடு அழியாமல் புதிய மாற்றங்களோடு இன்றும் வழக்கில் உள்ளது. இதை தவிர்த்து, வெளி நாட்டவரும் இந்தய மரபு மருத்துவத்தின் மகிமையை அறிந்து, இம்முறைகளை நாடுகின்றனர்.

இந்திய மரபு மருத்துவத்தின் மகிமையை உணர்ந்த வெளி நாட்டவரும், தற்கால மருத்துவர்களும், மற்றும்  அனைத்துலக விஞ்ஞானிகளும் இம்முறைகளை அரும்பெரும் திரவியமாகவே கருதுகின்றனர்.  சற்றுமுன், அயல் நாட்டு விஞ்ஞானிகள்,  வேம்பு, மஞ்சள் போன்ற மரபு மருத்துவத்தின் மூலிகையில் இருந்து புதிய மருந்துகளை பிரித்தெடுக்க  முனைந்தனர்.  இத்தகைய முயற்ச்சி வரவேற்கத்தக்கது. இன்றைய அறிவியலின் உதவியோடு புதிய மருத்துவ குணமுடைய பயனுள்ள தாய் சேர்மங்களை அடையலாம் காண்பது எல்லோருக்கும் நன்மையே. ஆயினும், அயல் நாட்டவர் இந்திய மரபு முலிகை மேல் உரிமை பாராட்டாமல் இருக்கும்வரை சர்ச்சை இல்லை. 

இந்திய அரசு, மரபறிவு மின்னணு நூலகம் (Traditional Knowledge Digital Library) வாயிலாக 2,00,000த்துக்கும் மேலான  மரபு மருத்துவ மூலிகைகளின் தயாரிப்பு  சூத்திரங்களை வெளியிட்டுள்ளது.  கடந்த 10 வருடமாக, 200 இந்தய விஞ்ஞானிகள் சித்த, ஆயுர்வேத, யுனானி, யோகா (yoga), இயற்கை மருத்துவம் (Naturopathy) போன்ற மருத்துவ முறைகளின் மூலிகை தயாரிப்பு சூத்திரங்களையும், முத்திரைகளையும் சேகரித்து ஒரு மின்னணு நூலகமாக நிறுவியுள்ளனர்.

இந்திய அரசின் தாமரை விருதுகள்
இந்திய மரபு மருத்துவ தொண்டுகளை பாரட்டும் வகையில், இந்திய அரசு தமது தாமரை (பத்ம) விருதுகளை வழங்கியுள்ளது. அண்மையில், சலகண்டபுரம் ராமஸ்வாமி கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு இந்திய அரசு, தாமரை (பத்ம ஸ்ரீ) விருது அளித்து அவர்களின் சித்த மருத்துவ தொண்டினை அலங்கரித்தது. குறிப்பாக, இவர் யானைச்சொறி (Psoriasis/சொரியாசிஸ்) னப்படும் ஒரு வகையான தோல் நோய்க்கு குணமளிக்கும் மருந்தினை கண்டுள்ளார். புவி எங்கும் இன்னும் இன் நோயின் தன்மையை அறிய ஆய்வு மேற்கொண்டிருக்கையில், இவர் குணமளிக்கும் மருந்தினை கண்டுள்ளது ஒர் அரிய சாதனையே.